அறுசுவை நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு விருந்து! வாழையிலையில் இடம்பெற வேண்டிய ஸ்பெஷல் உணவுகள்
செய்தி முன்னோட்டம்
சித்திரை மாதத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக தமிழ் புத்தாண்டு தினமானது உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் மிக முக்கியமான சிறப்பம்சமே, அறுசுவைகளும் சரிவிகிதத்தில் கலந்த பாரம்பரிய விருந்துதான். ஒவ்வொரு சுவையும் வாழ்க்கையின் வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பதாக கருதப்படும் இந்த விருந்து, குடும்ப உறுப்பினர்களை ஒன்றுசேர்க்கும் ஒரு கலாச்சாரப் பாலமாக அமைகிறது.
மாங்காய் பச்சடி
அறுசுவையின் சங்கமம்: மாங்காய்ப் பச்சடி
தமிழ் புத்தாண்டு விருந்தில் தவிர்க்க முடியாத முதல் உணவு மாங்காய்ப் பச்சடி ஆகும். இது இனிப்பு, கசப்பு, புளிப்பு மற்றும் காரம் ஆகிய நான்கு சுவைகளையும் உள்ளடக்கியது. வெல்லம், வேப்பம்பூ, மாங்காய் மற்றும் மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு, வாழ்க்கையில் நேரிடும் இன்பம், துன்பம், சினம் மற்றும் ஆச்சரியம் ஆகியவற்றை சமமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. இது வெறும் உணவு மட்டுமல்ல, புத்தாண்டின் ஆன்மீக அடையாளமாகவும் திகழ்கிறது.
உணவு
மொறுமொறுப்பான தொடக்கமும் பிரதான உணவுகளும்
விருந்தின் தொடக்கத்திற்கு மெதுவடை மற்றும் பருப்பு வடை கூடுதல் சுவையூட்டுகின்றன. உளுந்து மற்றும் கடலைப்பருப்பால் செய்யப்படும் இந்த வடைகள் கடவுளுக்கு படைக்கப்பட்டு பின் விருந்தில் பரிமாறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, காய்கறிகள் நிறைந்த சாம்பார் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த பொரியல் ஆகியவை சாதத்துடன் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக, பலவகைக் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் 'அவியல்' சத்துமிக்க உணவாகவும், விருந்தின் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.
செரிமானம்
செரிமானத்திற்கு உதவும் ரசம் மற்றும் அப்பளம்
வயிற்றுக்கு இதமளிக்கும் ரசம், விருந்தின் இறுதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தக்காளி, மிளகு, சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரசம், அதிகப்படியான உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. இதனுடன் மொறுமொறுப்பான அப்பளம் சேர்த்து உண்ணும்போது சுவை இரட்டிப்பாகிறது. பாரம்பரிய முறைப்படி இலையின் இடது ஓரத்தில் வைக்கப்படும் இந்த அப்பளம், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு பிடித்தமான இணை உணவாகும். இது போக தமிழர்களின் பிரபலமான வத்தக்குழம்பு, மோர், பானகம், ஊறுகாய், வறுவல் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும் மெனுவை கூட்டலாம்.
இனிப்பு
இனிப்பான முடிவு: பாயசம்
விருந்து முழுமையடைய இனிப்பு அவசியம். தமிழ்ப் புத்தாண்டில் பருப்புப் பாயசம் அல்லது சேமியா பாயசம் செழுமையான முறையில் தயாரிக்கப்படுகிறது. ஏலக்காய் மணம், முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கப்பட்ட இந்தப் பாயசம், வரவிருக்கும் ஆண்டு முழுவதும் இனிமையாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்பதன் குறியீடாகும். வாழை இலையில் பரிமாறப்படும் இந்த முழுமையான உணவு, தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.