சரியாக தூங்கவில்லை என்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு
நாம் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், அது காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் வருடாந்திர அறிவியல் அமர்வில் தங்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளை முன்வைத்த ஆராய்ச்சியாளர்கள், முந்தைய ஆய்வுகள் குறைவான தூக்கத்தினால் உயர் இரத்த அழுத்தம் வரலாம் என்று கூறி இருந்தாலும், அதற்கான சான்றுகள் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். உயர் இரத்த அழுத்தம் இல்லாத ஆறு நாடுகளைச் சேர்ந்த 10,44,035 பேரின் உயர் இரத்த அழுத்தத்தை மதிப்பீடு செய்ததன் மூலம் இந்த ஆய்வின் முடிவுகள் கிடைத்துள்ளன.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 16 ஆய்வுகளின் தரவுகள்
ஜனவரி 2000 மற்றும் மே 2023 க்கு இடையில் நடத்தப்பட்ட 16 ஆய்வுகளின் தரவுகள் அதற்கு பிறகு பகுப்பாய்வு செய்யப்பட்டது. வயது, பாலினம், கல்வி, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் போன்ற காரணிகளை சரிசெய்த பிறகும் கூட, குறைவான தூக்கம் மட்டுமே இருந்தால் அது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் 7% உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு அது 11% ஆக அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.