செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு
உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு என நினைத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்பது எதுவுமில்லை. அப்படியிருக்கையில் ஒருவர் தனது பிரச்சனையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்வதால் அவர்களை சார்ந்து இருப்போர் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பலரும் அறிவதில்லை. இதனிடையே, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைபடி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். அதன்படி உலகளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. தனிமை, பயம், ஏமாற்றம், வறுமை, குடும்ப பிரச்சனை போன்ற காரணங்கள் மக்களை தற்கொலை முயற்சிக்கு தூண்டுகிறது என்ற நிலை இருந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் நூதனமுறையில் பலர் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் பேராசை, பொழுதுபோக்கு என நினைத்து இதுபோன்ற மோசடிகளில் சிக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் பலர் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். இந்நிலையில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக உலகநாடுகள்,உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2003ம்ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-10ம்தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு,'செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்'என்னும் கருப்பொருள் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். தமிழகத்தில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.