பிரியாணி பிரியர்களின் சொர்க்கபுரி; இந்தியாவின் பிரியாணி தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பலருடைய உணர்ச்சியாகவே மாறிவிட்டது. லக்னோ முதல் கொல்கத்தா வரை பல நகரங்கள் பிரியாணிக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்தியாவின் பிரியாணி தலைநகரம் என்ற கௌரவத்தை தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் பெற்றுள்ளது. ஹைதராபாத் பிரியாணியின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் 'தம்' (Dum) தொழில்நுட்பமாகும். உயர்தரமான பாசுமதி அரிசி, மென்மையான இறைச்சி மற்றும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து, பாத்திரத்தைச் சீல் வைத்து மிதமான தீயில் நீண்ட நேரம் சமைக்கும் போது கிடைக்கும் அந்தத் தனித்துவமான சுவை உலகப் புகழ்பெற்றது. இது முகலாயர்களின் சமையல் கலையும், உள்ளூர் நிஜாம்களின் கலாச்சாரமும் இணைந்து உருவான ஒரு அற்புதமான கலவையாகும்.
அங்கீகாரம்
ஏன் இந்த அங்கீகாரம்?
ஹைதராபாத்தில் பிரியாணி என்பது திருவிழாக்கால உணவு மட்டுமல்ல, அது அங்குள்ள மக்களின் அன்றாட உணவாகும். நண்பர்களின் சந்திப்பு, திருமணங்கள் அல்லது சாதாரண மதிய உணவு என எதுவாக இருந்தாலும் அங்கு பிரியாணிக்குத் தான் முதலிடம். ஸ்விக்கி போன்ற உணவு விநியோக நிறுவனங்களின் தரவுப்படி, இந்தியாவில் ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு ஐந்து பிரியாணிகளில் ஒன்று ஹைதராபாத்திலிருந்து ஆர்டர் செய்யப்படுகிறது. இந்த அதீத விருப்பமே அந்த நகரத்திற்கு 'பிரியாணி தலைநகரம்' என்ற பெயரைத் தேடித் தந்துள்ளளது.
அடையாளம்
கலாச்சார அடையாளம் மற்றும் வரலாறு
ஹைதராபாத் பிரியாணி வெறும் சுவைக்காக மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இது அந்த நகரத்தின் வரலாற்றோடும் பாரம்பரியத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பும் ஹைதராபாத் நகரின் உணவு வகைகளுக்காகச் சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. லக்னோ, கொல்கத்தா, ஆம்பூர் மற்றும் தாளசேரி என இந்தியாவில் பல பிரியாணி வகைகள் இருந்தாலும், உலகளவில் இந்திய பிரியாணி உணவின் தூதராக ஹைதராபாத் தம் பிரியாணியே திகழ்கிறது.