LOADING...
பீதித் தாக்குதல் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? மனநல பாதிப்பிற்கான முதலுதவிக் குறிப்புகள்
பீதித் தாக்குதல் எனும் மனநல பாதிப்பிற்கான முதலுதவிக் குறிப்புகள்

பீதித் தாக்குதல் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? மனநல பாதிப்பிற்கான முதலுதவிக் குறிப்புகள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2025
06:10 pm

செய்தி முன்னோட்டம்

உடல் நல பாதிப்புகளுக்கு முதலுதவி செய்வது குறித்துப் பலருக்குத் தெரியும், ஆனால், மனநலப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. குறிப்பாக, ஒருவருக்குப் பீதித் தாக்குதல் (panic attack) ஏற்படும்போது என்ன செய்வது என்று பலருக்குத் தெரிவதில்லை. சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தின்போது, பீதித் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பயணியை மற்றொரு பயணி அறைந்த சம்பவம், மனநலம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. இந்தச் சம்பவம், மனநல நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பரவலான வழிமுறைகள் இல்லாததையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

விளக்கம்

பதற்றம் (Anxiety) vs. பீதித் தாக்குதல் (Panic Attack)

பதற்றம், மன அழுத்தம், பீதித் தாக்குதல் போன்ற சொற்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டாலும், அவை வெவ்வேறு நிலைகளைக் குறிக்கின்றன. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் பதற்றம் 23.7% லிருந்து 35% ஆக அதிகரித்துள்ளது. மனநல வல்லுநர்களின் கூற்றுப்படி, பதற்றம் என்பது ஒரு உணர்வு நிலையாகும். இது பயம் அல்லது கவலையின் காரணமாக ஏற்படும் ஒரு உணர்ச்சியாகும். ஆனால், பீதித் தாக்குதல் என்பது திடீரென ஏற்படும் ஒரு தீவிரமான பயமாகும். இது 10-15 நிமிடங்களில் உச்சத்தை அடைந்து, சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் வரை நீடிக்கும்.

அறிகுறிகள்

பீதித் தாக்குதலின் அறிகுறிகள்

மூச்சுத் திணறல், வியர்த்தல், நடுக்கம், குமட்டல், நெஞ்சு வலி, தலைசுற்றல் போன்றவை பீதித் தாக்குதலின் பொதுவான அறிகுறிகள். அதன் உச்சநிலையில், இந்த அறிகுறிகள் மாரடைப்பு அல்லது ஆஸ்துமா தாக்குதலைப் போலவே இருக்கும். பீதித் தாக்குதல் ஏற்படும்போது, முதலில் நீங்களே அமைதியாக இருந்து, மென்மையான குரலில் பேசுங்கள். கூட்டத்திலிருந்து விலகி, அமைதியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். மெதுவாகவும், சீராகவும் மூச்சு விட ஊக்குவிக்கவும். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள், இந்த உணர்வுகள் படிப்படியாகக் குறையும் என்று ஆறுதலாகக் கூறுங்கள்.

செய்யக்கூடாதவை

பீதித் தாக்குதல் அடைந்தவர் அருகில் இருக்கும்போது செய்யக் கூடாதாவை

உங்கள் அருகில் பீதித் தாக்குதல் அடைந்தவர் இருக்கும்போது, நிதானமாக இருங்கள் அல்லது கவலைப்படாதீர்கள் என்பது போன்ற வார்த்தைகளைக் கூறாதீர்கள். அவர்களை அசைக்கவோ, கூட்டமாகக் கூடியோ தேவையற்ற கவனத்தை ஈர்க்கவோ கூடாது. அவர்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடவோ, பிடித்துக்கொள்ளவோ வேண்டாம். இந்த தருணங்களைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்.