ஆதரவற்றோர் & முதியோருக்கு 100 ஏக்கரில் நகரம்; ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அனந்த் ஆஷ்ரய் பூமி பூஜை நிறைவு
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக வாழ நீதா முகேஷ் அம்பானி அனந்த் ஆஷ்ரய் என்ற மாபெரும் நகரியம் உருவாக்கப்படவுள்ளது. மும்பை அருகே உள்ள கர்ஜத் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இத்திட்டத்திற்கு ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். ஆதரவற்றோர் தங்களது சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் இலாப நோக்கற்ற முறையில் இங்கு இலவசமாக செய்து தரப்படவுள்ளன.
நதிகளின் பெயரில் கிராமங்கள்
இந்திய நதிகளின் பெயரில் 8 கிராமங்கள் மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகள்
இந்த 100 ஏக்கர் நகரியத்தில் இந்தியாவின் புனித நதிகளின் பெயரைக் கொண்ட 8 குடியிருப்பு கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.
குடியிருப்பாளர்களுக்குத் தனித்துவமான வீடுகளும், அவர்களை கவனித்துக் கொள்ள பிரத்யேக பராமரிப்பாளர்களும் நியமிக்கப்படுவர்.
மேலும், இந்த வளாகத்திற்குள்ளேயே சிறப்பு மருத்துவமனை, மறுவாழ்வு மையம், பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களும் கட்டப்படவுள்ளன.
மூளை முடக்குவாதம், வலிப்பு நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவ உதவிகள் இங்கு வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு
சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலத் திட்டங்கள்
இந்த நகரியம் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 1,000 பேருக்குத் தெரபி பயிற்சிகள், கல்வி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகக் கிடைக்கும்.
மேலும், அருகிலுள்ள கிராமப்புற மக்களுக்குத் தேவையான சமூக சுகாதார சேவைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்படும்.
இத்திட்டம் கட்டங்கள் வாரியாகத் தேவையான அரசு அனுமதிகளைப் பெற்று மிக விரைவாக முழுமையடையும்.
நீதா அம்பானி
அன்பும் அரவணைப்பும் நிறைந்த இல்லமாக அமையும் என நீதா அம்பானி உரை
நிகழ்ச்சியில் பேசிய நீதா அம்பானி, குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் வளர்ந்து தங்களது கனவுகளை நிறைவேற்ற இந்த மையம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
முதியவர்கள் மரியாதையுடனும், தங்களின் தேவைகள் அன்போடு கவனிக்கப்படும் என்ற நம்பிக்கையுடனும் இங்கு வாழ்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இயற்கை சூழலுக்கு மத்தியில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவான பராமரிப்புடன் இ மையம் ஒரு குடும்பத்தைப் போல செயல்படும் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை இதுவரை 10 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது.