இப்போது நீங்கள் வீட்டிலேயே சில்லி பரோட்டா செய்யலாம்!
செய்தி முன்னோட்டம்
தமிழர்களின் விருப்பமான தேர்வில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு, பரோட்டா.
அதன் பிரபலம், வடஇந்தியர்கள், வெளிநாட்டவர்களையும் விட்டு வைத்ததில்லை.
பரோட்டாவில் பல மாறுதல்கள் கொண்டு வந்து அசத்துவதில் நம்மவர்களை மிஞ்ச முடியாது. அதில் ஒன்று தான் சில்லி பரோட்டா.
புரட்டாசி மாதத்தில், கடையில் சென்று பரோட்டா சாப்பிட முடியாமல் ஏங்குபவர்களே, இப்போது நீங்கள் வீட்டிலேயே, முட்டை சேர்க்காமல் பரோட்டா செய்யலாம்.
அதேபோல, மொறு மொறுப்பான சில்லி பரோட்டாவும் செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கம் இதோ:
card 2
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு
3 மேஜைக்கரண்டி பால்
1 பெரிய வெங்காயம்
1 தக்காளி
½ பச்சை குடை மிளகாய்
½ சிவப்பு குடை மிளகாய்
2 பச்சை மிளகாய்
3 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
1 மேஜைக்கரண்டி தனியா தூள்
1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்
1 மேஜைக்கரண்டி சர்க்கரை
தேவையான அளவு வெண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி தழைகள் பொடியாக நறுக்கப்பட்டது
சிறிதளவு கருவேப்பிலை
card 3
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதை நன்கு பிசையவும்.
பின்பு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும்.
சுமார் 15 நிமிடம் வரை அடித்து பிசையவும்.
15 நிமிடம் நன்றாக அடித்து பிசைந்த பிறகு, மாவின் மேலே சிறிதளவு எண்ணெய்யை தடவி அதை அப்படியே ஒரு மூடி போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
card 4
செய்முறை
இப்பொழுது மாவை சிறிதளவு எண்ணெய் விட்டு, ஒரு உருண்டையை கைகளால் தட்டி அதை நன்கு பெரிதாக விரித்து விடவும்.
பின்பு அதன் மேலே சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து, ஒரு கத்தியின் மூலம் செங்குத்தான வாக்கில் அதில் கோடுகளை போடவும்.
பின், அதை நீளவாக்கிலேயே எடுத்து, அதை சுருட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்.
அனைத்து உருண்டைகளையும் இதே போல செய்து ஓரமாக வைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு சப்பாத்தி கல்லில், 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுருட்டி வைத்துள்ள பரோட்டாக்களை சுட்டு எடுக்கவும்.
பரோட்டாக்கள் ஆறியதும் அதை நம் கைகளின் மூலம் சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு கொள்ளவும்.
card 5
செய்முறை
ஒரு கடாயில், 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை போட்டு, பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன், தனியா தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் உப்பு போட்டு, சுமார் 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
பிறகு அதில் கெட்சப், சில்லி சாஸை ஊற்றி நன்கு கலந்து விடவும்.
பின்னர் பிய்த்து வைத்திருக்கும் பரோட்டா துண்டுகளை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை நன்கு கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, பரிமாறவும்.