ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?
சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும். இது கொண்டைக்கடலை மற்றும் கீரையின் வளமான நற்பண்புகளையும், சுவையையும், நறுமணமிக்க மசாலா கலவையுடன் ஒருங்கிணைத்து தயார் செய்யப்படுகிறது. இது ஆரோக்கிய உணர்வுள்ளவர்களுக்கும், சைவ பிரியர்களுக்கும் ஏற்ற உணவாகும். இந்த கொண்டக்கடலை கீரை கறி, சுவை அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் செயல்படுகிறது.
கொண்டைக்கடலை கீரை கறிக்கு தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள் இந்த கறிக்கு, உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்: ஒரு கப் ஊறவைத்த கொண்டைக்கடலை இரண்டு கப் சுத்தம் செய்து, நன்றாக கழுவி நறுக்கிய கீரை (முளை கீரை அல்லது பசலை கீரை) ஒரு பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) இரண்டு தக்காளியின் விழுது இரண்டு பூண்டு(பொடியாக நறுக்கியது) ஒரு அங்குலம் இஞ்சி (பொடியாக நறுக்கியது) ஒரு தேக்கரண்டி சீரகம் ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள் ஒரு தேக்கரண்டி மல்லி தூள் ஒன்றரை தேக்கரண்டி கரம் மசாலா சுவைக்கு உப்பு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர்.
சுவையான கொண்டக்கடலை கீரை கறி செய்முறை
ஊறவைத்த கொண்டைக்கடலையை, உப்பு சேர்த்து மென்மையாகும் வரை அல்லது பிரஷர் குக்கரில் 4 விசில் வைத்து சமைக்கவும். மறுபுறம், ஒரு பெரிய கடாயில், மிதமான தீயில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அதனுடன், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியத்தொடங்கும் வரை வதக்கவும். நறுக்கிய கீரையை சேர்த்து, மெல்லிய தணலில், சுமார் ஐந்து நிமிடங்கள், கீரை வேகும் வரை தொடர்ந்து கிளறவும்.
சப்பாத்தி, நாண், சாதத்துடன் சாப்பிடலாம்!
கீரை கலவையில் இப்போது வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கறி ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும். பின்னர் 10 நிமிடங்கள் குறைவான தணலில் மூடி வைத்து, சமைக்கவும். இறுதியாக கரம் மசாலாவை தூவி, அடுப்பிலிருந்து இறக்குமுன்னர், நன்கு கிளறவும். சுவையான கொண்டக்கடலை கீரை கறி தயார்! இதனை சூடான மதிய உணவிற்கு சாதத்திற்கு காயாகவும் அல்லது நாண், ரொட்டி போன்ற நார்த்-இந்தியன் உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாகவும் பரிமாறவும் .