புரட்டாசி ஸ்பெஷல் - காலிஃப்ளவர் பெப்பர் வறுவல்
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு பிரியர்கள் அனைவருமே சைவ உணவினை மட்டும் எடுத்துக்கொண்டு விரதத்தில் இருப்பீர்கள். அவ்வாறு விரதம் மேற்கொண்டுள்ளவர்களுக்கான பதிவு தான் இது. இம்மாதம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதில் கூறப்பட்டுள்ள முறைப்படி காலிஃப்ளவரை பெப்பர் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருமே இந்த ரெசிபியினை நிச்சயம் விரும்பி சாப்பிடுவர். வாருங்கள் செய்முறை விவரங்கள் குறித்து பார்ப்போம்.
செய்ய தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1 பூ எண்ணெய் - தே.அளவு வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா (அ) சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி பட்டை - 1 துண்டு கிராம்பு - 2 ஏலக்காய் - 3 சோம்பு - 1 டீஸ்பூன் அண்ணாச்சி பூ - 1 உப்பு - தே.அளவு
காலிஃப்ளவரை சுத்தம் செய்யும் முறை
முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். அதன் பின், காலிஃப்ளவர் ஒரு பத்து நிமிடத்திற்கு அந்த நீரிலேயே இருக்கட்டும். பிறகு காலிஃப்ளவரை அந்த தண்ணீரில் இருந்து எடுத்து தனியே வைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் காலிஃப்ளவரில் உள்ள புழு, பூச்சுக்கள் இறந்துவிடும். காலிஃப்ளவரை மட்டும் எப்போதும் பச்சை தண்ணீரில் மட்டும் கழுவி சமைக்க கூடாது. அது உடல்நலத்திற்கு நல்லதல்ல.
செய்முறை விளக்கம்
உணவு குறிப்புகள்:அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் சூடான பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, சோம்பு, அண்ணாச்சி பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். அது அனைத்தும் நன்றாக பொறிந்தப்பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்க்கவும். வெங்காயம் பாதி வதங்கிய பிறகு, 2 டீஸ்பூன் அளவு இஞ்சிப்பூண்டு பேஸ்டினை போட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்குங்கள். அதனையடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் போட்டு வதக்கவும். ஒருசேர அனைத்தும் வதங்கியப்பிறகு அதில் மிளகாய் பொடி, தனியாப்பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா உள்ளிட்டவைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
காலிஃப்ளவரின் சுவையினை கூட்டும் பெப்பர் வறுவல்
5 நிமிடங்கள் கழித்து அதில் காலிஃப்ளவரை போட்டு அது வேகும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் 5-10 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும். காலிஃப்ளவர் வெந்த பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளையும் சேர்த்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் பெப்பர் பொடி 2 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கிளறிவிட்டு எண்ணெய்யில் வதங்க விடுங்கள். 2-3 நிமிடங்கள் கழித்து அனைத்தையும் ஒருசேர கிளறி விட்டு அடுப்பினை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான காலிஃப்ளவர் பெப்பர் வறுவல் தயார்.