புரட்டாசி மாதம் ஸ்பெஷல் - சுவைமிக்க புரட்டாசி பிரியாணி செய்வது எப்படி ?
செய்தி முன்னோட்டம்
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே நம்முள் பலர் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவோம்.
அம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் பலர் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு, விரதம் இருப்பர்.
பின்னர் சனிக்கிழமைகளில் வீட்டில் பெருமாளுக்கு தலுகையிட்டு வழிபடுவதினை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் விரதமிருக்கும் அசைவ உணவு பிரியர்களை திருப்தியடைய வைக்கக்கூடிய, மட்டன் பிரியாணி சுவையினை மிஞ்சும் விதத்திலான புரட்டாசி பிரியாணியை எப்படி செய்வது? என்பதனை தான் இந்த செய்திக்குறிப்பில் நாம் காணவுள்ளோம்.
உணவு
புரட்டாசி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
மீல் மேக்கர் - 100 கிராம் நெய்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் புதினா மற்றும் கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பிரியாணி இலை - தேவைக்கேற்ப
கிராம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சுவை
பிரியாணிக்கு சுவைக்கூட்டும் மீல்மேக்கர்
இந்த புரட்டாசி பிரியாணிக்கு சுவைசேர்க்கக்கூடிய முக்கிய பொருள் என்றால் அது இந்த மீல்மேக்கர் தான்.
அசைவ உணவின் சுவையினை பிரதிபலிக்கும் இந்த மீல்மேக்கரை பிரியாணியில் சேர்ப்பதற்கு முன்னர் சுடுநீரில் போட வேண்டும்.
அதன்படி கொதிக்கும் நீரில் நாம் எடுத்துள்ள இந்த ஒரு கப் மீல்மேக்கரினை போட்டு அதில் தேவையான அளவு உப்பு போட்டு ஊற வைக்க வேண்டும்.
நன்கு ஊறிய பின்னர் அதனை வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவேண்டும்.
அதனை தொடர்ந்து, கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தினை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
செய்முறை
புரட்டாசி பிரியாணி செய்முறை
உணவு குறிப்புகள் : குக்கரை அடுப்பில் வைத்து முதலில் நெய் மற்றும் எண்ணெயினை ஊற்ற வேண்டும்.
அது சூடான பின்னர் அதில் பட்டைத்தூள், பிரியாணி இலை உள்ளிட்டவைகளை போட்டு தாளிக்க வேண்டும்.
அதன்பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனை தொடர்ந்து, தக்காளியை போட்டு வதக்கிய பின்னர் சீரகத்தூள், மிளகுத்தூள், சோம்புத்தூள், கிராம்புத்தூள் உள்ளிட்டவைகளை போட்டு நன்றாக வதக்கவும்.
மசாலா நன்கு வதங்கிய பின்னர் எடுத்துவைத்துள்ள ஒரு கைப்பிடி அளவிலான கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளையும் சேர்க்க வேண்டும்.
அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீரினை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
ரெடி
சுவையான 'புரட்டாசி பிரியாணி' ரெடி
நன்றாக கொதி வந்தபிறகு அதில் நாம் முன்னதாக சுடுநீரில் போட்டு எடுத்து வைக்கப்பட்ட மீல்மேக்கர், நன்றாக கழுவி சிறிதுநேரம் ஊறவைக்கப்பட்டிருந்த பாஸ்மதி அரிசி உள்ளிட்டவைகளை சேர்க்கவும்.
அத்துடன் தேவையான அளவு உப்பினையும் சேர்த்து குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும்.
குக்கர் ஒரு விசில் வந்தவுடனோ அல்லது 3 நிமிடங்கள் கழித்தோ அடுப்பினை நிறுத்தி குக்கரை திறக்கவும்.
அதன்மேல் கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறவும்.
அவ்வளவு தான் சுவையான புரட்டாசி பிரியாணி ரெடி.