Loading...
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலம்! இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ரிவெஞ்ச் டிரஸ்; பின்னணி என்ன?
இளவரசி டயானாவின் ரிவெஞ்ச் டிரஸ் ஏலம்

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலம்! இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ரிவெஞ்ச் டிரஸ்; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
03:57 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் இளவரசி டயானா அணிந்து உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புகழ்பெற்ற ரிவெஞ்ச் டிரஸ் (Revenge Dress) சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலத்திற்கு வருகிறது. நியூயார்க்கில் உள்ள முன்னணி சோதேபிஸ் ஏல நிறுவனம் வரும் டிசம்பர் 9 அன்று இந்தக் கருப்பு நிறப் பட்டு ஆடையை ஏலம் விடுகிறது. கிரேக்க வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் உருவாக்கிய இந்த ஆடை, சுமார் 1.4 கோடி முதல் 2.8 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவெஞ்ச் டிரஸ்

ரிவெஞ்ச் டிரஸ் பெயர்க் காரணம்

கடந்த 1994 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று லண்டனில் நடைபெற்ற தொண்டு நிறுவன விருந்து நிகழ்ச்சியில் டயானா இந்த ஆடையை அணிந்து பங்கேற்றார்.

அதே நாளில், இளவரசர் சார்லஸ் தான் டயானாவுக்குத் துரோகம் செய்ததைத் தொலைக்காட்சியில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அந்த சோகமான தருணத்தில், அரச குடும்பத்தின் பாரம்பரிய ஆடைகளைத் தவிர்த்து, தைரியமாக இந்த ஆடையை அணிந்து வந்ததன் மூலம் டயானா ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனால் இந்த ஆடை ரிவெஞ்ச் டிரஸ் என உலகப்புகழ் பெற்றது.

மூன்று ஆண்டுகள்

மூன்று ஆண்டுகளாக ஆடை வைக்கப்பட்டிருந்த பின்னணி

இந்த ஆடை மிகவும் கவர்ச்சியாக இருந்ததால், சுமார் மூன்று ஆண்டுகளாகத் தனது ஆடை அலமாரியிலேயே டயானா இதனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தார்.

ஆனால், தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழலில், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாக இந்த ஆடையை அவர் பயன்படுத்தினார்.

ஆடையுடன் சேர்த்து வைரம் மற்றும் நீலக்கல்லால் ஆன பழமையான மாலையையும் அவர் அணிந்திருந்தார்.

ஃபேஷன் உலக வரலாற்றில் பெண்களின் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தும் அடையாளமாக இந்த ஆடை இன்றும் போற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஏலத்தொகை

தொண்டு நிறுவனத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஏலத்தொகை

கடந்த 1997 ஆம் ஆண்டு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்ட டயானாவால் ஏலம் விடப்பட்ட 79 ஆடைகளில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது மீண்டும் ஏலம் விடப்படும் இந்த ஆடையின் விற்பனைத் தொகையின் ஒரு பகுதி, எடின்பர்க் ராயல் மருத்துவமனை சார்பாக தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கடந்த 1990களுக்குப் பிறகு, சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆடை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட இருப்பது ஃபேஷன் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT