தீபாவளிக்கு பிறகு உலகின் 100 மாசடைந்த நகரங்களில் 93 இந்திய நகரங்கள்: அதிர்ச்சி அறிக்கை
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சர்வதேச அளவில் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட 100 நகரங்களின் பட்டியலில் 93 இந்திய நகரங்கள் இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நவம்பர் 9 அன்று AQI.in தளம் வெளியிட்ட சர்வதேச காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவரிசையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் 868 என்ற அபாயகரமான புள்ளிகளுடன் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாபின் ஃபரித்கோட் 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பதிண்டா 797 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
காற்று மாசுபாடு
வட இந்திய நகரங்களின் தீவிர காற்று மாசுபாடு
ஹரியானாவின் சிர்சா 612 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பிவானி 548 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பதாயூன், ஹிசார், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. பத்தாவது இடத்தில் பிரயாக்ராஜ் உள்ளது.
வழக்கமாக அதிக காற்று மாசுபாட்டிற்குப் பெயர்போன நாட்டின் தலைநகரான புது டெல்லி, 380 புள்ளிகளுடன் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வராமல் போனாலும், அபாயகரமான காற்றுத் தரப் பிரிவிலேயே நீடிக்கிறது.
பிற மாநில நிலவரம்
வெளிநாட்டு நகரங்கள்
வட இந்தியா மட்டுமின்றி பிற பிராந்தியங்களிலும் காற்றின் தரம் மிக மோசமாகப் பதிவாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் போபால் 284 புள்ளிகளையும், மகாராஷ்டிராவின் புனே 278 மற்றும் பீகாரின் பாட்னா 258 புள்ளிகளையும் எட்டியுள்ளன.
உலகளாவிய 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைத் தவிர்த்துப் பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத், பிரிட்டனின் கிட்புரூக், கேட்ஃபோர்ட் மற்றும் இந்தோனேசியாவின் சம்பிட் ஆகிய குறிப்பிட்ட சில நகரங்களே இடம்பெற்றுள்ளன.
இந்தத் தரவுகள் தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.