உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையைப் பராமரிக்க உதவும் முக்கியக் காரணி
உணவு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால், உணவிலேயே பிடித்த உணவுகள் மற்றும் பிடிக்காத உணவுகள் என்ற வேறுபாடுகள் அனைவரிடமும் இருக்கும். இதில் பிடித்த உணவு என்றால் சிலர் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு பின்னர் அவதிப்படுவார்கள். முக்கியமாக, எடைக் குறைப்பு அல்லது எடையை பராமரிக்க வேண்டியவர்கள், தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு வேளைக்கும் குறிப்பிட்ட அளவு உணவை எடுத்துக் கொள்வதன் மூலம், அதிகமாகவும் சாப்பிட்டு உடல் எடை கூடிவிடாமல் அதேநேரம் குறைவாகச் சாப்பிட்டு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதைத் தடுக்கவும் முடியும். தேவையான அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்வதன் மூலம், எடையைக் குறைக்கவோ அல்லது பராமரிக்கவோ முடியும்.
தேவைக்கேற்ப உணவு:
தேவைக்கேற்ப உணவு என்பது, நம்முடைய உடல் நிலைக்கு ஏற்ப, நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளவிடுவதாகும். உடல் உழைப்பு அதிகம் தேவையில்லாதவர்கள் குறைந்த அளவு உணவு எடுத்துக் கொண்டாலே போதும். ஆனால், உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் குறைந்த அளவு உணவு எடுத்துக் கொண்டால், சீக்கிரமே மீண்டும் பசிக்கத் தொடங்கிவிடும். மேலும், எக்காரணம் கொண்டு நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் அளவை விட அதிகமான உணவை உட்கொள்ளக் கூடாது. உடல் எடையைக் குறைக்க, குறைந்த உணவை உட்கொள்பவர்கள் பிறகு பசியின் காரணமாக மிக அதிக அளவை உட்கொள்ள நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சீரான உணவு, சிறப்பான ஆரோக்கியம்!
உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க உங்களுக்கு சில வழிகள்
ஒரு சிறிய தட்டு பயன்படுத்தவும்: ஒரு பெரிய தட்டில் சிறிதளவு உண்ணவோ வைத்து சாப்பிடும் போது, போதுமான அளவு சாப்பிடாதது போல தோன்றலாம். அதனால், உங்கள் மனதில் பசிப்பது போல உணரலாம். இதைத் தவிர்க்க, ஒரு சிறிய தட்டு பயன்படுத்தவும். அதனால், அதிகமாகச் சாப்பிடுவதையும் தடுக்க உதவும். அளவிடும் கோப்பைகளைப் பயன்படுத்தவும்: எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று ஒரு அளவு கோப்பையை பயன்படுத்தி அளவிட்டு சாப்பிடவும். ஒவ்வொரு முறையும், நீங்களே உணவைப் பரிமாறும்போது, உங்கள் ஊட்டச்சத்து பகுதி அளவுகள் சீரானதாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்
மெதுவாக சாப்பிடுங்கள்: உங்கள் உணவை சிறிய பகுதிகளாக, மெதுவாக சாப்பிடவும். உணவை நன்றாக மென்று சாப்பிட பழகுங்கள். உங்கள் வயிறு நிரம்பியதை, உங்கள் மூளை உங்களுக்கு உணர்த்த 20 நிமிடங்கள் ஆகுமாம். அதனால், நீங்கள் மெதுவாக உண்பதால், உங்கள் வயிறு நிரம்பி விட்டதா, இன்னும் தேவை படுகிறதா என்பதை உணர்ந்து சாப்பிடலாம். எஞ்சியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்: நீங்கள் உண்மையிலேயே பசியுடன் இருக்கிறீர்களா அல்லது உணவை வீணாக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளீர்களா என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம்.
உணவு கட்டுப்பாடு அவசியம்
இது போன்ற சிறு சிறு முன்னெடுப்புகள் மூலம், உங்கள் உணவு கட்டுப்பாட்டை கடை பிடிப்பதனால், ஆரோக்கியம் மேம்படும். அதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என கூறுகிறார்கள் உணவு கட்டுப்பாட்டின் போது, உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறதா என்பதும் முக்கியம். அதனால், சிறிய பகுதிகளில் உணவை எடுத்துக்கொண்டாலும், உங்கள் தினசரி ஊட்டச்சத்துகளும் அதனோடு சேர்த்து கொள்வது இன்றியமையாதது.