வெயிட் லாஸ் ஊசி போடுறீங்களா? ஜாக்கிரதை! ஊசியை நிறுத்தியதும் எடை எகிறும்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பகீர் ஆய்வு
செய்தி முன்னோட்டம்
தற்போது உடல் எடையைக் குறைக்கப் பயன்படும் ஊசிகள் பெரும் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக செமாக்ளுடைடு (Semaglutide) போன்ற மருந்துகள் உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவுகின்றன. இருப்பினும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்த ஊசிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, மக்கள் தங்களின் இழந்த எடையை இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் முழுமையாகப் பெறுகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 9,341 நபர்களிடம் நடத்தப்பட்ட 37 முந்தைய ஆய்வுகளை மறுஆய்வு செய்ததில், இந்த ஊசிகளை நிறுத்திய பிறகு சராசரியாக மாதம் 0.4 கிலோ வரை உடல் எடை அதிகரிப்பது தெரியவந்தது.
எடை
மீண்டும் எடை அதிகரிப்பு
ஊசியைப் பயன்படுத்திய காலத்தில் சராசரியாக 8.3 கிலோ எடையைக் குறைத்தவர்கள், அதனை நிறுத்திய ஓராண்டிற்குள்ளேயே 4.8 கிலோ எடையை மீண்டும் பெற்றுவிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக, ஊசியை நிறுத்திய 1.7 ஆண்டுகளில் அவர்கள் ஆரம்பத்தில் இருந்த பழைய எடைக்கே திரும்பிவிடுகின்றனர். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் எடையைக் குறைப்பவர்களை விட, இந்த ஊசிகள் மூலம் எடையைக் குறைத்துவிட்டு நிறுத்துபவர்களுக்கு உடல் எடை கூடும் வேகம் அதிகமாக உள்ளது. மாதம் 0.3 கிலோ வேகத்தில் இவர்கள் எடை அதிகரிக்கிறார்கள் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் சாம் வெஸ்ட் தெரிவித்துள்ளார். இது மருந்தின் தோல்வி அல்ல, மாறாக உடல் பருமன் என்பது நீண்ட காலமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நாள்பட்ட நிலை என்பதை உணர்த்துகிறது.
மேலாண்மை
நீண்ட கால மேலாண்மை அவசியம்
இந்த ஊசிகள் பசியைக் குறைத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து எடையைக் குறைக்க உதவினாலும், இவற்றை நிறுத்தியதும் பசி மீண்டும் தூண்டப்படுவதால் எடை அதிகரிக்கிறது. எனவே, குறுகிய காலத் தீர்வாக இந்த ஊசிகளைப் பயன்படுத்துவது நீண்ட கால நன்மையைத் தராது. முறையான உணவு மேலாண்மை மற்றும் உடற்பயிற்சியுடன் இணைந்த நீண்ட காலத் திட்டங்களே உடல் எடையைத் தக்கவைக்க உதவும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.