குறட்டை இனி பிரச்சனையே இல்லை! இரவு தூங்கும் முன் ஒரு மாத்திரை போதும்; மருத்துவ உலகில் புதிய புரட்சி
செய்தி முன்னோட்டம்
இரவில் உறங்கும் போது ஏற்படும் பலத்த குறட்டைச் சத்தம், வெறும் சத்தம் மட்டுமல்ல; அது 'தடைபட்ட தூக்க மூச்சுத்திணறல்' (Obstructive Sleep Apnea) என்ற தீவிர மருத்துவப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தூக்கத்தின் போது சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இதற்காக தற்போது சிபிஏபி போன்ற இயந்திரங்கள் மற்றும் முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பலருக்கும் இவற்றைப் பயன்படுத்துவது வசதியாக இருப்பதில்லை.
மாத்திரை
புதிய வாய்வழி மாத்திரை
இந்தச் சூழலில், கேம்பிரிட்ஜைச் சேர்ந்த அப்னிமெட் என்ற பயோடெக் நிறுவனம், குறட்டை மற்றும் தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறலுக்குத் தீர்வாக ஒரு புதிய மாத்திரையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த மாத்திரைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், குறட்டைப் பிரச்சினைக்கு இயந்திரங்கள் இன்றி மாத்திரை மூலம் தீர்வு காண்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
செயல்பாடு
மாத்திரை எப்படிச் செயல்படுகிறது?
தூக்கத்தின் போது தொண்டையில் உள்ள தசைகள் அளவுக்கு அதிகமாகத் தளர்வடைவதால் காற்றுப்பாதை அடைபட்டு குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அப்னிமெட் நிறுவனத்தின் இந்த மாத்திரை, அந்தத் தசைகளைத் தூண்டி, தூக்கத்தின் போது காற்றுப்பாதை மூடிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் மூலம் சுவாசம் தடையின்றி நடப்பதோடு, குறட்டைச் சத்தமும் குறைகிறது. மருத்துவச் சோதனைகளில் இந்த மாத்திரை 47% வரை பலன் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வரப்பிரசாதம்
நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் தூக்க மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 10.4 கோடி பேர் இந்தப் பிரச்சனையால் அவதிப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்படாத தூக்க மூச்சுத்திணறல் இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். முகக்கவசம்அணிந்து தூங்கத் தயங்குபவர்களுக்கு, படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக்கொள்ளும் இந்த எளிய மாத்திரை ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.