
இந்தியாவில் விநாயகருக்குத் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இருக்கும் ஒரே இடம்; இந்த கோவிலைப் பற்றி தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில், தனது தனித்துவமான சிறப்புகள் மற்றும் வளமான வரலாறு காரணமாக ஆன்மீகவாதிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. ஆளுநர் மாளிகை மற்றும் அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோயிலில், விநாயகர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று, இந்தியாவில் விநாயகருக்குத் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இங்கு மட்டுமே இருப்பதுதான். மேலும், விநாயகருக்குத் திருக்கல்யாணம் நடைபெறும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நிய படையெடுப்பு
அந்நிய படையெடுப்பிலும் தாக்குப்பிடிக்க கோயில்
சுமார் 8,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில், புதுச்சேரியின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. புதுச்சேரி பலமுறை அந்நியப் படையெடுப்புகளுக்கு உள்ளானபோதும், இந்தக் கோயில் சேதமடையாமல் தப்பியது. இக்கோயிலின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், மகாகவி பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது, நான்மணிமாலை பாடல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையாபிள்ளை உள்ளிட்ட பல கவிஞர்கள் மணக்குள விநாயகர் குறித்துப் பாடல்களைப் படைத்துள்ளனர். ஆவணி மாதத்தில் 25 நாட்கள் பிரம்மோற்சவம் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயில் கானாபத்திய ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. 5 கிலோ எடையுள்ள 91.66 தரத்திலான தங்கக் கவசம் இங்குள்ள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் புத்தாண்டு தினங்களில் இக்கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும்.