யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!
கோடைகாலத்தில் வெப்பம் தீவிரமடையும் நிலையில் குளிர்ச்சியான இனிப்பு வகைகளின் மீது நமக்கு ஏற்படும் ஆசை வர்ணிக்க முடியாதது. இதில் முதலில் ஐஸ்கிரீம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. உலகின் ஒரு முக்கிய ஆன்லைன் உணவு வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ், உலகெங்கிலும் உள்ள சிறந்த குளிர்ச்சியான இனிப்புகளின் பட்டியலை வெளியிட்டது. பல வகையான உணவு வகைகள் இருப்பினும் இந்தியாவின் பெருமைக்குரிய இனிப்பு வகைகளாக பார்க்கப்படும் குல்ஃபி மற்றும் குல்ஃபி ஃபலூடா பட்டியலில் இடம்பெற்றுள்ளது. குல்ஃபி என்பது இந்தியாவின் ஒரு பாரம்பரியமான குளிர்ச்சியான இனிப்பு வகையில் ஒன்றாகும். இந்த குல்ஃபி சிறந்த குளிர்ச்சியான இனிப்புகளில் 14 வது இடத்தைப் பெற்றுள்ளது. குல்ஃபி ஃபலூடா என்பது குல்ஃபி, சேமியா, ரோஸ் சிரப், உலர் பழங்கள், பல்வேறு டாப்பிங்ஸின் கலவையாகும்.
குளிர்ச்சியான இனிப்பு வகை
இது பட்டியலில் 30வது இடத்தை பெற்றுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் ஆட்சியின் போது குல்ஃபி தோன்றியதாக நம்பப்படுகிறது. முகலாய சமையல்காரர்கள் குங்குமப்பூ மற்றும் பிஸ்தா போன்ற நறுமண பொருட்களை கொண்டு தனித்துவமாக இதனை உருவாக்கினர். குல்பியை வெப்பமான பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உலோகக் கூம்புகளில் அடைத்து, பனி மற்றும் உப்பு கலவையில் உறைய வைத்தனர். புதுமையான முறையில் இந்த குல்பி உருவானது. இதற்கிடையில், டேஸ்ட் அட்லஸின் பட்டியலில் ஈரானின் பஸ்தானி சொனாட்டியை முதலிடத்திலும் பெருவின் கியூசோ ஹெலடோ, துருக்கியின் டோன்டுர்மா, அமெரிக்காவின் ஃப்ரோசன் கஸ்டர்ட், பிலிப்பைன்ஸ் ஐஸ்கிரீம் சோர்பட்ஸ் மற்றும் இத்தாலியின் டெசர்ட் ஜெலடோ அல் பிஸ்டாச்சியோ ஆகியவை முதல் 10 இடங்களை பிடித்தன.