Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள்
பெற்றோர்களே, தினமும் உங்கள் குழந்தைகள் பருகும் பாலில் 'சத்துகள்' அடங்கிய சாக்லேட் பவுடர் கலக்கி தருகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குதான். சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), நேற்று (ஏப்ரல் 26) அன்று Bournvita -வை தயாரிக்கும் Mondelez Indiaவிற்கு, அதன் அனைத்து தயாரிப்புகளிலும் உள்ள "தவறான" விளம்பரங்கள், லேபிள்கள் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றை அகற்ற உத்தரவிட்டதாக PTI தெரிவித்துள்ளது. அதோடு ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? ஏப்ரல் 1 அன்று, ரேவந்த் ஹிமத்சிங்கா என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், Bournvita குறித்து விமர்சித்திருந்தார். அவரது வீடியோ வைரலானதை அடுத்து இந்த பிரச்னை வெடித்துள்ளது.
Bournvita-வில் கேன்சர் உண்டாக்கும் மூல பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறும் ரேவந்த்
அந்த வீடியோ பதிவில், ரேவந்த், ஹெல்த் ட்ரிங் என்ற பெயரில், கேன்சர் உண்டாக்கும் மூல பொருட்கள் மற்றும் அதிகளவில் சர்க்கரையை பயன்படுத்துகிறது என கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, NCPCR ஆணையம். அந்த நோட்டீஸில், "உங்கள் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளின் பேக்கேஜிங் மற்றும் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகிறது". "தயாரிப்பின் லேபிளிங் மற்றும் பேக்கேஜிங் ஆகியவை, Bournvita ஹெல்த் பானத்தில் பயன்படுத்தப்படும் உள்ளடக்கங்கள் தொடர்பான சரியான தகவலை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டன" என்று கூறியது. இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த Bournvita, "கடந்த ஏழு தசாப்தங்களாக, தரமான தரநிலைகளை கடைபிடிக்கும் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு இணங்கக்கூடிய, அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்பின் மூலம் இந்தியாவில் நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது" என்று கூறியது.