'உலக எமோஜி தினம்' ஒன்று கொண்டாடப்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ம் நாள் உலக எமோஜி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எமோஜிக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பரவலாக எமோஜிக்கள் பயன்படுத்தப்படுவதைக் கொண்டாடும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் மொழிகளைப் பேசும் மக்களாலும் பயன்படுத்தப்படும் எமோஜிக்களுக்கான விளக்கத்தை வழங்கும் வகையில் 2013-ல் எமோஜிபீடியா என்ற தளத்தை உருவாக்கினார் ஜெரிமி புர்கே. அவரே 2014-ல் இந்த எமோஜி தினத்தையும் உருவாக்கியிருக்கிறார். அப்போதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 17 உலக எமோஜிக்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வேற்றுமைகளுக்கிடைய ஒற்றுமையை உருவாக்கும் எமோஜியை முதன்முதலில் வடிவமைத்தவர் ஷிகேடாகா குறிட்டா என்ற ஜப்பானியர். 1999-ல் ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான NTT டோகோமோவில் வேலை பார்க்கும் போது முதல் எமோஜியை வடிவமைத்திருக்கிறார் அவர்.
எமோஜியின் வரலாறு:
'எமோஜி' என்பது ஒரு ஜப்பானிய மொழிச் சொல். இதற்கு அம்மொழியில் 'பட வார்த்தை' எனப் பொருளாம். 2007-ல் தங்கள் முதல் ஐபோனை வெளியிட்டது ஆப்பிள். அந்நிறுவனம் தங்களுடைய ஜப்பானிய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக முழுவதுமாக எமோஜிக்களால் ஆன எமோஜி கீபோர்டை அறிமுகப்படுத்தியது. ஆப்பிளின் இந்த எமோஜி கீபோர்டைப் பற்றித் தெரிந்து கொண்ட அமெரிக்கர்கள், 2010-களில் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டு தாங்களும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்தே எமோஜிக்கள் உலகமெங்கும் பல்வேறு மக்களாலும் பயன்படுத்தத் தொடங்கப்பட்டிருக்கிறது. சாதாரணமான எழுத்துக்களால் ஆன குறுஞ்செய்திகள் எமோஜிக்களின் வரவால் மேம்படத் தொடங்கின. நமது உணர்வுகளை வார்த்தைகளின்றி ஆழமாக வெளிப்படுத்த உதவும் எமோஜிக்களை நாமும் கொண்டாடலாமே!