
ஊழியர்கள் நல்வாழ்வில் கடைசி இடம் பிடித்த ஜப்பான்.. கடின உழைப்பாளிகளைக் கொண்ட இந்தியா
செய்தி முன்னோட்டம்
பணிபுரியும் ஊழியர்களின் நல்வாழ்வு குறித்த ஆய்வு ஒன்றை உலகளவில் 30 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தியிருக்கிறது மெக்கென்ஸி ஹெல்த் இன்ஸ்ட்டிட்யூட்.
பணியாளர்களின் உடல்நல, மனநல மற்றும் சமூகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அந்த ஆய்வில் வெறும் 25% மட்டுமே பெற்று ஊழியர்களின் நல்வாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது ஜப்பான்.
ஊழியர்களின் நல்வாழ்வில் உலகளாவிய சாரசரி 57% ஆக இருக்கும் நிலையில், ஜப்பான் அதனை விட மிகக் குறைவான சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறது.
ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமான வேலைவாய்ப்பு மற்றும் பணி பாதுகாப்பை வழங்கும் போதிலும், பல ஊழியர்கள் திருப்தியில்லாமலேயே வேலை செய்து வருவதாக இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
இந்தியா
இந்தியாவிற்கு எந்த இடம்?
பணியின்மை, பணி பாதுகாப்பின்மை எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தப் பட்டியலில் 76% பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
உலகளவில் கடுமையான உழைப்பாளிகளைக் கொண்ட ஒன்றாக இந்தியா இருப்பதாக, சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வு முடிவில் குறிப்பிட்டிருக்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
2023-ல் இந்தியாவில் பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 47.7 மணி நேரமாவது உழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் அதிக நாட்கள் வேலை செய்யும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முன்னணியிலேயே இருப்பதாகத் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்து அது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.