கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது?
முறையான உணவுப்பழக்கம் என்பது உணவை சமைக்க தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, அதை சாப்பிடும் முறை வரை நீடிக்கிறது. என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது மட்டும் முக்கியமில்லை, அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். இந்தியாவில் கைகளால் சாப்பிடுவது என்பது நம் பாரம்பரியங்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக கைகளால் உணவை சாப்பிட்டு வருகிறோம். மேற்கத்திய உணவுப் பழக்கம், அதாவது ஸ்பூன், ஃபோர்க் உள்ளிட்டவை பழக்கமாகும் முன்பு வரை, உணவை கைகளால் உண்ணும் பழக்கம் மட்டுமே இருந்தது. இப்போது நாகரிகம், ஸ்டைல் என்று பழக்கத்தை பலரும் மறந்து வருகின்றனர். இதில், ஒரு சில உணவுகளை கைகளால் மட்டுமே சாப்பிட முடியும்! நமக்கும் உணவிற்குமான உறவு, கையினால் பிசைந்து சாப்பிடும்போதே ஏற்படுகிறது.
கையினால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
உணவை கையால் எடுத்து சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு மூளைக்கு தகவலாய் சென்றடைகிறது. இதனால் மூளை செரிமானத்திற்கு தேவையான அமிலங்களை சுரக்கிறது. கைகளை கழுவிவிட்டு சாப்பிடும் போது, நம்முடைய கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள், செரிமானத்துக்கு உதவுகின்றன. உணவை ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையினால் சாப்பிடும் போது அதிக நேரம் எடுக்கிறது. இதனால் நீங்கள் உணவை மென்று சாப்பிடுவதற்கு நேரம் கிடைக்கிறது. கையால் சாப்பிடாமல் ஸ்பூனில் சாப்பிட்டால், ரசித்து சாப்பிட முடியாது. Appetite என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வின் படி, கைகளால் சாப்பிடும் போது, திருப்தியாக, வயிறு நிறைவாக இருக்கும், சாப்பிடும் உணவின் அளவும் குறைவாக இருக்கும்.