எந்நேரமும் சோர்வா இருக்கீங்களா? ரத்த சோகையாக இருக்கலாம்; அலட்சியப்படுத்தக் கூடாத முக்கிய அறிகுறிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு என்பது ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நமது உடலில் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் மூலம் ஆக்சிஜனைக் கடத்துவதற்கு இரும்புச்சத்து மிக அவசியம். இது ஆற்றல் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல் வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, இந்தியாவில் 67.1% குழந்தைகள் மற்றும் 57% பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிவது சிகிச்சையை எளிதாக்கும்.
பலவீனம்
அதீத சோர்வு மற்றும் பலவீனம்
ரத்த சோகையின் மிக முக்கியமான அறிகுறி தீராத சோர்வு ஆகும். போதுமான ஓய்வு எடுத்த பிறகும் உடல் சோர்வாகவே இருக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. இதனால் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற சாதாரண வேலைகளைச் செய்வதற்குக் கூட உடல் ஒத்துழைக்காது. கைகள் மற்றும் கால்களில் ஒருவித பலவீனத்தை உணரக்கூடும்.
மூச்சுத்திணறல்
சருமம் வெளிறிப் போதல் மற்றும் மூச்சுத்திணறல்
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, சருமம் தனது இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிப் போகும். குறிப்பாக முகம், உள்ளங்கைகள் மற்றும் கண்களின் உட்பகுதி வெளிறிக் காணப்படும். அதேபோல், சிறிய வேலைகளைச் செய்யும் போது கூட மூச்சுத்திணறல் ஏற்படும். உடல் திசுக்களுக்கு ஆக்சிஜனை வழங்க இதயம் மற்றும் நுரையீரல்கள் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது.
தலைச்சுற்றல்
படபடப்பு மற்றும் தலைச்சுற்றல்
இதயம் ரத்தத்தை வேகமாகச் செலுத்த முயற்சிப்பதால், இதயத் துடிப்பு சீரற்றதாகவோ அல்லது மிக வேகமாகவோ இருக்கலாம். இது படபடப்பை உண்டாக்கும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் குறைவதால் அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் கவனக்குறைவு போன்றவை ஏற்படும். அமர்ந்திருந்து திடீரென எழுந்திருக்கும் போது கண்கள் இருட்டிக்கொண்டு வருவது ரத்த சோகையின் முக்கிய அறிகுறியாகும். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உணவு அல்லாத பொருட்களை உண்ணும் விசித்திரமான ஆசை ஏற்படும். உதாரணமாக ஐஸ் கட்டிகள், மண், களிமண் அல்லது சாக் போன்றவற்றைத் தின்னத் தோன்றும். இது தவிர, கைகள் மற்றும் கால்கள் எப்போதும் குளிர்ந்த நிலையில் இருப்பது, நகங்கள் கரண்டி வடிவில் மாறுவது மற்றும் அதீத முடி உதிர்தல் ஆகியவையும் ரத்த சோகையைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகளாகும்.