சர்வதேச தாய்மொழி தினம் 2023: அதன் வரலாறு, தீம், முக்கியத்துவம் மற்றும் பல
இன்று உலகம் முழுவதும் 6000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும், அதிகரிக்கும் உலகமயமாக்கம் மொழியியல் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தது. இது காலப்போக்கில், உலகம் முழுவதும், குறிப்பாக காலனித்துவ நாடுகளில், பல பூர்வீக மொழிகளை காணாமல் போகச்செய்தது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21ஆம் தேதி 'சர்வதேச தாய்மொழி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், பன்மொழி, அல்லது, குறைந்தபட்சம், இருமொழி கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை உருவாக்குகின்றன. மொழியியல் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளவும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழி மரபுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த நாள் வலியுறுத்துகிறது. இந்த ஆண்டு 24-வது சர்வதேச தாய்மொழி தினமாகும்.
இந்தியாவில் பேசப்படும் மொழிகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசுவது, 121 மொழிகள் என வரையறுக்க பட்டுள்ளது. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, காஷ்மீரி, கொங்கனி, மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, உருது , போடோ, சந்தாலி, மைதிலி மற்றும் டோக்ரி ஆகியவை பிராந்திய மொழிகளாக அறியப்படுகின்றன. ஒருவரின் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழிக் கல்வி என்பது, கற்பவரின் தாய்மொழியில் தொடங்கி, படிப்படியாக கூடுதல் மொழிகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த முறை, மாணவர்கள் வகுப்பறை சூழலை அவர்களின் சொந்த மொழியில் ஆராய்வதற்கு அனுமதிக்கிறது, மேலும் திறம்பட கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.