வாகன உரிமையாளர்களே அலெர்ட்; அக்டோபர் 31 முதல் ஃபாஸ்டேக் தொடர KYV கட்டாயம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள வாகன உரிமையாளர்கள் அனைவரும் அக்டோபர் 31 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக்கைத் (FASTag) தொடர்ந்து பயன்படுத்த, மத்திய அரசின் புதிய உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள் (KYV-Know Your Vehicle) சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த நடவடிக்கை, சுங்க வரி வசூல் முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கண்டறிந்தபடி, பல வாகனங்களில் ஒரே ஃபாஸ்டேக்கைப் பல வாகனங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது குறைவான கட்டணம் செலுத்த டிரக்குகளுக்குக் கார் ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகள் நடந்ததைக் கட்டுப்படுத்தவே KYV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம், ஒவ்வொரு ஃபாஸ்டேக்கும் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும், துல்லியமான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்.
ஆவணங்கள்
என்னென்ன ஆவணங்கள் தேவை?
KYV செயல்முறையை முடிக்க, வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC), ஆதார்/பான்/பாஸ்போர்ட் போன்ற சரியான அடையாளச் சான்று மற்றும் சில வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்கும் முன்புறப் புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும். இந்தச் சரிபார்ப்பை, ஃபாஸ்டேக்கை வழங்கிய வங்கி இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளலாம். சரிபார்க்கப்படாத அல்லது பகுதியளவு சரிபார்க்கப்பட்ட ஃபாஸ்டேக்குகள் தானாகவே செயலிழக்கப்படும் என்று NHAI எச்சரித்துள்ளது. இதனால், கணக்கில் இருப்பு இருந்தாலும், KYV முடிக்கப்படாதவர்கள் சுங்கச்சாவடிகளில் பணமாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். நீண்ட கால நோக்கில், KYV மோசடியைத் தடுக்கும், திருடப்பட்ட வாகனங்களைக் கண்காணிக்க உதவும், அத்துடன் டிஜிட்டல் சுங்க வரி அமைப்பை வலுப்படுத்தும் என்றும் NHAI நம்பிக்கை தெரிவித்துள்ளது.