இறங்கி வந்த அமெரிக்கா; இந்தியாவை தாஜா செய்ய சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான பொருளாதாரத் தடை விலக்கு நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான இணைப்பு முயற்சிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான (Chabahar Port) பொருளாதாரத் தடை விலக்கு காலத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இந்த நீட்டிப்பின் மூலம், பொருளாதார தடை விலக்கு ஏப்ரல் 2026 வரை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் எந்தவொரு பொருளாதாரத் தடைக்கும் அஞ்சாமல் தனது செயல்பாடுகளைத் தொடர முடியும். ஈரான் சுதந்திரம் மற்றும் எதிர்-பரவல் சட்டத்தின் (IFCA) கீழ் 2018 இல் முதலில் வழங்கப்பட்ட இந்த விலக்கு, சமீபத்தில் வர்த்தக மோதல் காரணமாக ரத்து செய்யப்படுமோ என்ற கவலைகள் எழுந்த சில வாரங்களுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம்
இந்தியாவுக்கு சபஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம்
சபஹார் துறைமுகம், ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், பாகிஸ்தானின் நிலவழிப் பாதைகளைத் தவிர்ப்பதற்கும் முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கோதுமை மற்றும் யூரியா போன்ற சரக்குகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மே 2024 இல் கையெழுத்திடப்பட்ட 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா ஷாஹித் பெஹிஷ்டி முனையத்தை மேம்படுத்துவதற்காக $120 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது உபகரண மேம்பாடுகள் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடத்துடன் (INSTC) இணைப்பதையும் உள்ளடக்கியது. ஓமன் வளைகுடாவில் உள்ள ஈரானின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சபஹார் துறைமுகம், ஈரானின் கடலை நோக்கிய ஒரே துறைமுகமாகும்.
அமெரிக்கா
அமெரிக்கா தடை நீக்கத்தின் பின்னணி
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை, இந்திய விவசாயிகளின் நலனை பேணுவதில் அரசு உறுதியாக இருப்பதால் இழுத்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஆபரேஷன் சிந்தூரை தான் பேச்சுவார்த்தை நடத்தியே நிறுத்தியதாகவும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறியதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு, இந்தியா வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மோடி டிரம்புடன் நேரடியாக பேசுவதையும் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆசியான் உச்சிமாநாட்டிற்கு நேரடியாக செல்வதை தவிர்த்ததன் பின்னணியிலும் இந்த காரணம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் அதிருப்தியை சமாளித்து தாஜா செய்யும் வகையிலேயே அமெரிக்கா, சபஹார் துறைமுக விவகாரத்தில் இறங்கி வந்துள்ளதாக புவி அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.