LOADING...
கல்விதான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்! இன்று சர்வதேச கல்வி தினம்! வரலாற்றுப் பின்னணி
ஜனவரி 24 சர்வதேச கல்வி தினம்

கல்விதான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்! இன்று சர்வதேச கல்வி தினம்! வரலாற்றுப் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
09:56 am

செய்தி முன்னோட்டம்

உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (International Education Day) கொண்டாடப்படுகிறது. கல்வியறிவு இல்லாத சமூகத்தை ஒழிப்பதும், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதுமே இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த ஆண்டு எட்டாவது சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "கல்வியை இணைந்து உருவாக்குவதில் இளைஞர்களின் சக்தி" (The power of youth in co-creating education) என்பதாகும்.

கல்வி

எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வி முறை

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள். எனவே, அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வி முறையை உருவாக்குவதில் அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டிற்கான கருப்பொருள் வலியுறுத்துகிறது. வறுமை, சமத்துவமின்மை மற்றும் தரமான கல்வி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை இளைஞர்களின் துணையோடு கலைவதே இதன் இலக்காகும். ஐநா சபை, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, ஜனவரி 24 ஆம் தேதியைச் சர்வதேச கல்வி தினமாக அறிவித்தது. இதன் முதல் கொண்டாட்டம் 2019, ஜனவரி 24 அன்று நடைபெற்றது. தற்போது 59 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் இந்தத் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியா

இந்தியாவின் தேசிய கல்வி தினம்

தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு வரும் தற்போதைய சூழலில், பழைய கற்பித்தல் முறைகளை மாற்றி, நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. இளைஞர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில், உள்ளடக்கிய கல்வி முறையை உருவாக்குவதே ஐநா சபையின் குறிக்கோளாக உள்ளது. சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24 அன்று கொண்டாடப்பட்டாலும், இந்தியா தனது தேசிய கல்வி தினத்தை (National Education Day) நவம்பர் 11 ஆம் தேதி கொண்டாடுகிறது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவர் பெண் கல்விக்காகவும், நவீன இந்தியக் கல்விக்காகவும் அரும்பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement