LOADING...
டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பு: இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்கு கல்தா? ஐசிசி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்
டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பிற்காக ஐசிசி வங்கதேசம் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்

டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பு: இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்கு கல்தா? ஐசிசி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 23, 2026
08:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. தங்களது அரசாங்கத்துடன் ஆலோசிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்ட ஒரு நாள் கால அவகாசம் முடிந்த நிலையிலும், அவர்கள் இந்தியா வர மறுப்பதில் உறுதியாக உள்ளனர்.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்துக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்

வங்கதேசத்தின் பிடிவாதமான முடிவைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் அணிக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணியை உலகக்கோப்பை தொடரில் சேர்க்க ஐசிசி உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி தலைவர் ஜெய் ஷா இது குறித்து இறுதி முடிவு எடுக்க தற்போது துபாயில் உள்ளார்.

இழப்புகள்

வங்கதேசத்திற்கு ஏற்படப்போகும் மாபெரும் இழப்புகள்

உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, கடைசி நேரத்தில் ஒரு பெரிய தொடரைப் புறக்கணிப்பது வங்கதேச கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். நிதி இழப்பு: குழு நிலை போட்டிகளில் பங்கேற்பதற்கான கட்டணமான $300,000 தொகையை அவர்கள் இழப்பார்கள். வருவாய் பங்கீடு: 2024-27 காலகட்டத்திற்கான ஐசிசி வருவாய் பங்கீட்டு மாதிரியில் வங்கதேசத்திற்கு வழங்கப்பட வேண்டிய பெரும் தொகையை ஐசிசி ரத்து செய்யவோ அல்லது அபராதமாகப் பிடிக்கவோ வாய்ப்புள்ளது. தரவரிசை சரிவு: மற்ற 20 அணிகள் உலகக்கோப்பையில் விளையாடும் போது, வங்கதேசம் விளையாடாததால் அதன் தரவரிசைப் புள்ளிகள் அதலபாதாளத்திற்குச் செல்லும். தகுதிச் சுற்று கட்டாயம்: அடுத்த உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்து, கத்துக்குட்டி அணிகளுடன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு வங்கதேசம் தள்ளப்படும்.

Advertisement

வீரர்கள்

வீரர்களின் நிலை என்ன?

இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாட ஆர்வமாக இருந்தபோதிலும், அந்நாட்டு வாரியமும், இந்திய எதிர்ப்பு மனநிலையில் உள்ள தற்போதைய இடைக்கால அரசாங்கமும் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. "எங்கள் வீரர்கள் டி20 போட்டிகளில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளனர். சமீபத்திய முடிவுகளே அதற்குச் சாட்சி. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழல் துரதிர்ஷ்டவசமானது" என்று வங்கதேச அணி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement