"ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ஆபத்து!" 90% இந்தியர்களுக்கு ரத்தக் கொழுப்பு! ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-INDIAB) நடத்திய தேசிய அளவிலான அண்மைக்கால ஆய்வு, இந்தியர்களின் ஆரோக்கியம் குறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வயது வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு ரத்தத்தில் அசாதாரண கொழுப்பு அளவுகள், அதாவது டிஸ்லிபிடெமியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அல்லது ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பதும், நல்ல கொழுப்பு குறைவாக இருப்பதுமே இந்த நோய் பாதிப்பாகும். இதுவே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான இதய நோய்களுக்கு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.
ஆய்வு
23,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு
மருத்துவ உலகில் புகழ்பெற்ற ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் லிபிடாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், நாடு முழுவதும் இருந்து சுமார் 23,665 நபர்கள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த ஆய்வின் முடிவுகளின்படி, இந்தியாவில் கொழுப்பு பாதிப்பு என்பது தற்பொழுது ஒரு சிலருக்கு மட்டும் வரும் சாதாரண நோயாக இல்லாமல், ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் பாதிக்கும் ஒரு பொதுப் பிரச்சனையாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 87.3 சதவீத மக்கள் ஏதேனும் ஒரு வகையான டிஸ்லிபிடெமியா கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதில் உறுதியாகியுள்ளது.
நகரங்கள்
கிராமங்களை விட நகரங்களில் பாதிப்பு அதிகம்
இந்தியாவில் இந்த இரத்த கொழுப்பு நோயானது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய இரண்டு இடங்களிலுமே மிக வேகமான விகிதத்தில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் இதன் பாதிப்பு 89 சதவீதமாகவும், அதே வேளையில் கிராமப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் 86.5 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
பாலின அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஆண்களை விடப் பெண்களுக்குத் தான் இந்த கொழுப்பு பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
ஆண்களுக்கு 83.5 சதவீத பாதிப்பு உள்ள நிலையில், பெண்களுக்கு 91.1 சதவீதம் என்ற அளவில் இந்த பாதிப்பு நீடிக்கிறது.
ஒல்லியாக இருப்பவர்கள்
ஒல்லியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பவர்களுக்கும் ஆபத்து
இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மிக முக்கியமான மற்றும் ஆபத்தான உண்மை என்னவென்றால், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற எந்தவொரு அறிகுறியும் இல்லாத, உடற்பயிற்சி செய்யும் 40 சதவீத ஆரோக்கியமான நபர்களுக்கும் இந்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, ஒரு நபர் ஒல்லியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் என்பதால் அவருக்கு இதய நோய் வராது என்று சொல்ல முடியாது.
இதனால், குறிப்பிட்ட நோயாளிகளை மட்டும் பரிசோதிக்காமல், இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மிகக் குறைந்த வயதிலேயே பொது லிபிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இளம் வயதில் மாரடைப்பு
30 வயதிலேயே மாரடைப்பு அபாயம் ஏற்படுவது ஏன்?
மேற்கத்திய நாடுகளில் வயதான காலத்தில் தான் கொழுப்பு பிரச்சனைகள் உச்சத்தைத் தொடும்.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக இந்தியாவில் 30 முதல் 39 வயதுடைய இளம் உழைக்கும் வர்க்கத்தினரிடையே தான் இந்த டிஸ்லிபிடெமியா பாதிப்பு உச்சத்தைத் தொடுகிறது.
இந்தியாவில் 66.8 சதவீத மக்களுக்கு ஹெச்டிஎல் (HDL) எனப்படும் நல்ல கொழுப்பு மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
எனவே, மாரடைப்பைத் தடுக்கவும், சிகிச்சைகளின் செயல்திறனைக் கண்காணிக்கவும், நல்வாழ்வு உணவு முறைகளை மாற்றவும் ஒவ்வொருவரும் தங்களது கொலஸ்ட்ரால் அளவை வழக்கமான மாதாந்திர அல்லது வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது இன்றியமையாததாகும்.