கனமழைக்குப் பிறகு வரும் புழுக்கமான நாட்கள் நோய் வரவழைக்கும், ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்த வருடம் பருவமழை ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. சில இடங்களில் கனமழை பெய்யும் அதே நேரத்தில் சில மாவட்டங்களில் புழுக்கமான நாளாகவும், லேசான தூறலாகவும் இருக்கிறது. இப்படி சீரற்ற பருவமழை நமது ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எப்படியென்றால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் வரலாம். கனமழைக்கு பிறகு வரும் புழுக்கமான நாட்கள் உங்கள் உடல்நலனை எப்படி பாதிக்கும் என்பதை பார்க்கலாம்.
காரணம்
கனமழைக்குப் பிறகு ஈரப்பதம் ஏன் அதிகமாகிறது?
பொதுவாக, பருவமழை காலத்தில் மேகங்கள் வானத்தை மூடிவிடும். அதனால் சூரிய ஒளி பூமிக்கு வந்து சேராது. இதனால் பகல் நேர வெப்பநிலை குறையும். ஆனால், இரவு நேரத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். மேகங்கள் கலைந்த பிறகு, சூரியனின் நேரடி ஒளி படும்போது பகல் நேர வெப்பநிலை கூடி விடும். இதோடு மேகங்கள் கலைந்த பிறகு காற்றில் இருக்கும் ஈரப்பதமும் ரொம்பவே அதிகமாகிடும்.
காரணம்
புழுக்கமான நாட்கள் ஏன் நோயை வரவழைக்கும்?
புழுக்கமான நாட்களில் காற்றில் ஈரப்பதம் ரொம்பவே அதிகமாக இருக்கும். இதனால் மூச்சு விடுவதில் அதிக கஷ்டம் வரலாம். இதோடு, உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தவதும் கஷ்டமாக மாறிடும். இப்படி இருக்கும்போது, உடம்பில் கிருமித் தொற்று பரவுவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது. அதனால் சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.
நோய்கள்
புழுக்கமான நாட்களில் வரக்கூடிய நோய்கள்
புழுக்கமான நாட்களில் நிறைய பேர் சோர்வு, தலைவலி, எரிச்சல், ஒருவித பதட்டம் இதெல்லாம் உணர்வார்கள். இதோடு, இந்த சீசனில் சரும அரிப்பு, வாய் வறண்டு போவது, தலைசுற்றல், வாந்தி மாதிரியான பிரச்சனைகளும் வரலாம். அதே சமயம், இந்த காலத்தில் நிறைய பேருக்கு வைரல் காய்ச்சல், நிமோனியா, ஆஸ்துமா, டெங்கு, சிக்குன்குனியா, காலரா மாதிரியான நோய்களும் வர வாய்ப்பு உள்ளது. அதனால் புழுக்கமான நாட்களில் நம்மை நாமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைத்து முயற்சியையும் செய்ய வேண்டும்.
குறிப்புகள்
ஆரோக்கியமாக இருக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்
நாம் ஆரோக்கியமாக இருக்க, உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதோடு, பழச்சாறுகள் மற்றும் இளநீர் குடிக்கலாம். உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் மஞ்சள் பால் குடிப்பது நல்லது. அதுமட்டுமில்லாமல், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும். கிருமித் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க் போடுங்கள், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க மறவாதீர்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அதிக ஈரப்பதத்தினால் வரும் பிரச்சனைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
புழுக்கமான நாட்களில் வீட்டிற்குள்ளேயே சில லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம். அப்போதுதான் உடம்பு புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஈரப்பதத்திலிருந்து தப்பிக்க வெளியே செல்லாமல், வீட்டிற்குள்ளயே இருங்கள். வீட்டில் குளுமையான காற்றை தரும் கருவிகளை பயன்படுத்தலாம். வீட்டில் பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு தனியாக கவனம் தர வேண்டும். அதே போல் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளையும் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயங்களை கவனமாக செய்தால், நிறைய நோய்களிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளலாம்.