UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
இந்தியாவின் முன்னணி பணப்பரிவர்த்தனை முறையாக விளங்கி வருகிறது யுபிஐ. ஒரு நாளில் 36 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளை இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மேற்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும், யுபிஐ சேவையைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், ஏதாவது ஒரு நேரம் தவறாக நாம் வேறு நபர்களுக்கு பணம் அனுப்பிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. வேறு நபர்களுக்கு யுபிஐ மூலம் தவறாகப் பணம் அனுப்பியும் சில சமயங்களில் நாம் சிரமப்பட்டிருப்போம். அப்படி நடக்கும் பட்சத்தில், அந்தப் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன?
பணத்தைத் திரும்பப் பெறும் வழிமுறைகள்:
முதலில் மிக எளிதான வழி, நாம் தவறாக பணத்தை அனுப்பியவரைத் தொடர்பு கொண்டு அந்தப் பணத்தை மீண்டும் நமக்கு அனுப்பச் சொல்வது. அந்த வேற்று நபரைத் தொடர்பு கொள்ள முடியாத அல்லது அவர் நம்முடைய பணத்தைத் திருப்பித் தராத பட்சத்தில், நம்முடைய சேவை வழங்குநரிடம் புகாரளிக்கலாம். நாம் பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்திய கூகுள்பே அல்லது போன்பே நிறுவனங்களிடம், நாம் பணம் அனுப்பியதற்கான ஆதாரம் (பொதுவாக ஸ்கிரீன்ஷாட்) நமது வங்கிக்கணக்கு விபரங்கள் மற்றும் நம்முடைய விபரங்களைக் கொடுத்து புகார் எழுப்பலாம். இது குறித்து புகார் எழுப்பிய 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் நம்முடை பணம் நமக்கு திரும்ப வந்து விடும்.
அடுத்த கட்ட நடவடிக்கை:
சேவை வழங்குநரிடம் புகார் அளித்தும் நம்முடைய பணம் திரும்பி வராத பட்சத்தில், யுபிஐ சேவையை வழங்கி வரும் NPCI-யிடமும் (National Payments Corporation of India) புகார் அளிக்கலாம். NPCI அமைப்பிடம் இங்கே கிளிக் செய்து புகார் அளிக்கும் பக்கத்திற்குச் சென்று புகார் அளிக்கலாம். இங்கே புகார் அளிக்கும் போதும், நம்முடைய வங்கிக் கணக்கு விபரங்கள், யுபிஐ விபரங்கள், பணப் பரிவர்த்தனை விபரங்கள், ஆதாரத்திற்காக பணப் பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட் மற்றும் வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை அளிக்க வேண்டியிருக்கும். இவற்றிற்கிடையில், நேரடியாக நமது வங்கியையும் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் புகாரளிக்கலாம். அதற்கு மேற்கூறிய ஆவணங்களும், தகவல்களும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.