சுவையான மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் மிளகு சாதம் செய்வது எப்படி?
உலகளவில் மிளகை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில இருக்கும் வியட்நாமோ, ஆண்டிற்கு 2.16 லட்சம் டண்கள் மிளகை உற்பத்தி செய்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா ஆண்டுக்கு 55,000 டண்கள் மிளகை உற்பத்தி செய்கிறது. 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்று ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் கடுகு எனக் குறிப்பிடப்படுவது மிளகு தான். நம் தினசரி உணவுக்குத் தேவையான காரத்தையும், உடலுக்கு பல்வேறு பலன்களையும் சேர்த்து அளிக்கவல்லது மிளகு. இப்படி பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கும், மூலிகையாகவும் பயன்படும் மிளகை எப்படி 'மிளகு சாதம்' செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப் வறுத்து அரைத்த மிளகு தூள் - 2 தேக்கரண்டி பொடித்து வைத்த சீரக தூள் - 1 தேக்கரண்டி நல்லலெண்ணெய் அல்லது நெய் - 2 தேக்கரண்டி கடுகு - கால் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை - 2 தேக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிதளவு பொடித்த முந்திரி பருப்பு - 3 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
மிளகு சாதம்: செய்முறை
சமையலைத் தொடங்குவதற்கு முன்பு, மிளகை மிக்ஸியிலோ அம்மியிலோ இட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தையும் நன்கு பொடித்து, முந்திரியை சின்னச் சின்னசாத நறுக்கிக் கொள்ளுங்கள். வேர்கடலையை ஒரு கடாயில் போட்டு வறுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். சாதத்தை வடித்து உதிரி உதிரியாக தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் விருப்பத்திற்கு ஏற்ப நல்லெண்ணெய் சேர்த்து, அது காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து பொறிக்க விடுங்கள். கடுகு பொறிந்த பிறகு, அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக:
அனைத்து பருப்புகளையும் போட்டு நன்கு வறுத்த பிறகு, நாம் தனியே அரைத்து வைத்திருக்கும் மிளகுத் தூள் மறறும் சீரகத் தூளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். வதங்கியதும், அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின்னர் நாம் தனியே வடித்து வைத்திருக்கும் வெள்ளை சாதத்தை அதனுடன் கலந்து நன்கு கிளற வேண்டும். சாதத்தை வாணலியில் போட்டதும், நாம் செய்து வைத்திருக்கும் மிளகுக் கலவை அனைத்து பக்கமும் சரிசமமாககப் பரவ நன்கு கிளறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர், நறுக்கிய மல்லித் தழையை சிறிதவு மேலே தூவி பறிமாறினால் சிறப்பு. மிளகு தான் இதில் முக்கியப் பங்காற்றும் பொருள், எனவே அதனை கடையில் பொடியாக வாங்காமல் வீட்டிலேயே அரைத்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.