
புரட்டாசி மாதத்தில் ஆம்லெட் பிரியர்களுக்கான வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
உலகில் முட்டையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு வகைகளில் முட்டயை சமைத்தாலும், இந்தியாவில் அதனை ஆம்லெட்டாக சாப்பிட தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
எந்த வகை உணவாக இருந்தாலும், சைடு டிஷ்சாக ஆம்லெட்டை செய்து சுவையாக சாப்பிட்டு முடித்து விடலாம். ஒரு நாளில் மூன்று வேளையுமே கூட ஆம்லெட் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது புரட்டாசி மாதம் வேறு துவங்கி விட்டதே, ஆம்லெட் சாப்பிட முடியாதே என கவலைப்படுபவரா நீங்கள்? உங்களுக்காவே இருக்கிறது வெஜ் ஆம்லெட் ஸ்பெஷல் ரெசிபி.
சைவ உணவுப் பொருட்களைக் கொண்ட வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?
சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்:
மஞ்சள் பாசிபருப்பு - ஒன்றரை கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 1
கேரட் - 1
மிளகு- 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சோடா உப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சமையல் குறிப்பு
வெஜ் ஆம்லெட்: செய்முறை
முதலில் பாசிபருப்பை தண்ணீரில் நன்றாக அலசி தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக்கியும், கேரட்டை துருவியும் தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்சியில், மேலே எடுத்து வைத்த பாசிபருப்பு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீர் இல்லாமல் அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அந்த மாவுடன் வெங்காயம், கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, காய்ந்த மிளகாய் மற்றும தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஐந்து முதல் பத்து நிமிடம் வரை அதனை ஊற வைத்து விட்டு பின்னர், தோசைக் கல்லில் அடை ஊற்றுவதைப் போல மிதமான சூட்டில் எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் வெஜ் ஆம்லெட் ரெடி.