ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்வது நல்லது
முன்பு அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கூறிய நிலையில் இருந்து, இன்று ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் எனக் கணக்கிடும் நிலைக்கு வந்திருக்கிறோம். நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப ஒரு வங்கிக் கணக்கோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கோ நாம் தொடங்கலாம். ஆனால் பல்வேறு வல்லுநர்கள், ஒரு நபர் மூன்று வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம் என பரிந்துரை செய்கின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவற்றை பராமரிப்பது கடினம். மேலும், ஒரு சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்க வேண்டியிருக்கும். நிறைய வங்கி கணக்குகள் எனறால் அந்தத் தொகையும் கூடும்.
ஏன் பல வங்கிக் கணக்குகள் வைத்திருக்க வேண்டும்?
இன்று நம்முடைய பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் வங்கிகளின் மூலமே நடைபெறுகின்றன. மேலும், சில நேரங்களில் வங்கி வழங்கும் வரம்பை மீறி நமது தேவைகள் நீளும். அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு இருப்பது நமக்கு பலனளிக்கும். மேலும், ஒரே கணக்கில் நம்முடைய அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் போது சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஒரே கணக்கில் நாம் செலவும் செய்து சேமித்தும் வைக்க முடியாது. எனவே, சேமிப்புக்கு என்று தனி வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளும் போது மனதளவிலும் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்ள முடியும். அனைவருக்கும் மூன்று அல்லது நான்கு வங்கிக் கணக்குகள் தேவைப்படாது. ஒருவருடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ப எத்தனை வங்கிக்கணக்குகள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.