டீ பிரியர்கள் கவனத்திற்கு: நெஞ்செரிச்சல் முதல் மைக்ரோ பிளாஸ்டிக் வரை ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!
செய்தி முன்னோட்டம்
காலையில் கண் விழித்ததும் சுடச்சுட ஒரு கப் ஸ்ட்ராங் டீ, அலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க சில கப்புகள், இரவு தூங்குவதற்கு முன் ஒரு கப் கிரீன் டீ என நம்மில் பலருக்கு 'டீ' என்பது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. டீ குடிப்பது மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி தருவதாக நாம் நினைத்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அது செரிமான மண்டலத்தை எவ்விடம் பாதிக்கிறது என்பதைப் பற்றிப் பலரும் கவலைப்படுவதில்லை. அடிக்கடி டீ குடிப்பதால் நமக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மைப் பிரச்சினைகளின் பின்னணியில் இருக்கும் மருத்துவ உண்மைகளையும், நாம் செய்யும் தவறுகளையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
நெஞ்செரிச்சல்
உடலை மெல்லப் பாதிக்கும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல்
பால் டீ, பிளாக் டீ அல்லது கிரீன் டீ என எதுவாக இருந்தாலும் அதில் 'கேஃபைன்' என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இந்த கேஃபைன் நம் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை வழக்கத்தை விட அதிகரிக்கச் செய்கிறது. நம் உணவுச் செலுத்து குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையில் ஒரு தசை நாண் கதவு இருக்கும். இது வயிற்றில் உள்ள அமிலம் மேலே ஏறி வராமல் தடுக்கும் அரணாகச் செயல்படுகிறது. ஆனால், நாம் தொடர்ந்து அதிகப்படியான டீயை உள்ளே அனுப்பும்போது, இந்த தசைப் பகுதி தன் பலத்தை இழந்து தளர்கிறது. இதன் விளைவாக, வயிற்று அமிலம் எளிதாக உணவுப் பாதைக்குள் மேல்நோக்கிப் பாய்ந்து, கடுமையான நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மற்றும் வயிறு உப்பசம் போன்ற அசௌகரியங்களை உருவாக்குகிறது.
கொதிக்கும் தேநீரால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து மற்றும் மறைமுகப் பாதிப்புகள்
கொதிக்கும் தேநீரால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து மற்றும் மறைமுகப் பாதிப்புகள்
பலருக்கு டீயை ஆற்றி குடித்தால் குடித்த திருப்தியே இருக்காது. கொதிக்கும் சூட்டோடு, நாக்கு வெந்துபோகும் பதத்தில் குடிப்பதே பலரது அன்றாடப் பழக்கமாக உள்ளது. இத்தகைய அதீத வெப்பம் கொண்ட பானங்களைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது, அது நம் தொண்டை மற்றும் உணவுப் பாதையின் மென்மையான உட்புறச் சுவர்களை (Mucosal Lining) மெல்ல மெல்ல சுட்டெரிக்கிறது. இந்தத் திசு பாதிப்பு பல வருடங்களாகத் தொடரும் பட்சத்தில், அது உணவுப் பாதை புற்றுநோய் (Oesophageal Cancer) ஏற்படுவதற்கான வாய்ப்பை பல மடங்கு அதிகரிப்பதாகப் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, கொதிக்கும் சூட்டில் குடிப்பதை முற்றிலும் கைவிட வேண்டும்.
இதர பாதிப்புகள்
உடலுக்குள் நடக்கும் மறைமுகத் தாக்குதல்கள்!
மைக்ரோ பிளாஸ்டிக் நச்சு: தற்காலத்தில் பிளாஸ்டிக் இழை கலந்த 'டீ பேக்'களை சுடுநீரில் முக்கிப் பருகுவது நாகரிகமாகிவிட்டது. கொதிநீரில் இந்த பேக்குகளை முக்கும்போது, பல லட்சம் நுண் பிளாஸ்டிக் துகள்கள் டீயில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன. இது நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதித்து ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தும். ரத்த சோகை அபாயம்: டீயில் உள்ள 'டானின்கள்' நாம் உண்ணும் சைவ உணவுகளில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. இதனால் உடலில் ரத்த உற்பத்தி குறைந்து அனீமியா ஏற்படக் கூடும். ஆழ்ந்த தூக்கம் பாதிப்பு:மாலை அல்லது இரவு நேரங்களுக்கு மேல் டீ குடிக்கும்போது, அதிலுள்ள கேஃபைன் மூளையை விழிப்புடனேயே வைத்திருக்கும். இது நரம்புகளைத் தூண்டி, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுக்கும்.
எளிய மாற்றங்கள்
ஆரோக்கியமாக டீ குடிப்பது எப்படி?
டீயில் உடலுக்கு நன்மை பயக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளன. டீயைத் தயாரித்தவுடன் குடிக்காமல், குறைந்தது 5 முதல் 8 நிமிடங்கள் வரை லேசாக ஆறவிட்டு, மிதமான வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கப் பழகுங்கள். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப்புகளுக்கு மேல் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் பூசப்பட்ட டீ பேக்குகளைத் தவிர்த்து, எப்போதும்போல வடிகட்டிப் பயன்படுத்தும் சாதாரணத் தூள்களைக் கொண்டு டீ போடுங்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பெட்-டீ (Bed Tea) குடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, அதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். தூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே டீ குடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மூலிகை பானங்கள் அல்லது பால் பருகலாம்.