உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால், குறிப்பாக செவ்வாழையின் மகத்துவத்தை பற்றி தெரியுமா? நரம்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதம். இந்த செவ்வாழை பழத்தை, வயது வித்தியாசம் இன்றி அனைவருமே உண்ணலாம். செவ்வாழை பழத்தில், உடல் வளர்ச்சிக்கு தேவையான, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், தாது உப்புகள், இரும்பு என முக்கியமானவை நிரம்பி உள்ளது. இந்த வாழைப்பழத்தில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால், இது ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. மலச்சிக்கல், அஜீரண கோளாறுக்கு, இயற்கையாக அமைந்திருக்கும் சிறந்த தீர்வு.
இந்த வாழைப்பழத்தை எப்போது உண்ணலாம்?
சீதோஷண நிலைக்கு பொறுத்தவாறு பழங்களை உண்ண வேண்டும் என முன்னோர்கள் குறிப்பிட்டதை போல, சில பழங்களை உண்பதற்கு, நேரம் காலம் உண்டு. எப்போதும் உணவு சாப்பிடவுடன் எந்த பழத்தையும் உண்ண கூடாது. அது உணவு செரிமானத்திற்கு இடையூறாக மாறலாம். உணவு உண்ட பிறகு, 1 மணி நேரம் இடைவேளை விட்டு, எந்த பழத்தையும் உண்ணலாம். வாழைப்பழம் பொதுவாக உடலுக்கு குளிர்ச்சி என்பதால், காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் போது வாழை பழம் உண்ணக்கூடாது. பகல் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பழங்களை உண்ணலாம். அதே போல, வெறும் வயிற்றிலும் இந்த செவ்வாழை பழத்தை உண்ணலாம்.