உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா?
உடல் பருமனை குறைக்க, பலரும் பல டயட் முறைகளை பரிந்துரைப்பதுண்டு. தற்போது ஒரு புதிய டயட் ட்ரெண்ட் பரவி வருகிறது. அது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது என பலர் கூறுகிறார்கள். அதுதான் மோனோ டயட். ஆனால் இந்த டயட் முறை, உடலுக்கு ஏற்றதா? வல்லுநர்கள் கூற்று என்ன? இவற்றையெல்லாம் இப்போது காணலாம். மோனோ டயட் அல்லது மோனோட்ரோபிக் டயட்டில், ஒரு நபர், பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு ஒரே ஒரு வகை உணவை மட்டுமே சாப்பிடுவார். இந்த வகை டயட் முறையில், எந்த ஒரு வகுப்பட்ட விதிகளோ அல்லது ஒழுங்குமுறையோ இல்லை. வாழைப்பழம் மோனோ டயட், முட்டை மோனோ டயட் என பல்வேறு வகை மோனோ டயட்கள் உள்ளன.
மோனோ டயட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
மோனோ டயட், பின்பற்றுவதற்கு எளிதான டயட் ஆகும். வழக்கமான டயட் முறையில், தேவைப்படும் திட்டமிடலும், நேரமும் இதற்கு வேண்டாம். மோனோ டயட்டில், குறைவான கலோரிகளை உட்கொள்ளுவதால், குறுகிய காலத்தில், எடை இழப்பு நேருகிறது. நீங்கள், ஒரு நாளைக்கு, ஒரு உணவை மட்டுமே சாப்பிடுவதால், கலோரி உட்கொள்ளல் அதிக அளவில் குறைகிறது. அதனால், நீர் இழப்பு மற்றும் வீக்கம் அதிகமாகி, காலப்போக்கில் தசைகள் அதன் பலத்தை இழக்கிறது. விரைவான எடை இழப்பு, பித்தப்பைக் கற்கள், எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, மலச்சிக்கல், தலைவலி, எரிச்சல், மாதவிடாய் முறைகேடுகள், முடி உதிர்தல் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தும். மோனோ உணவுகள், உடல் சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தசை இழப்புக்கு வழிவகுக்கும். அதனால் மோனோ டயட்டை வல்லுநர்கள் எதிர்க்கிறார்கள்.