Loading...
பிஸ்லெரி குடிநீர் சர்ச்சை: குடிநீரில் உருவாகும் 'புரோமேட்' என்றால் என்ன? இதனால் புற்றுநோய் ஏற்படுமா? முழு விளக்கம்
பிஸ்லெரி குடிநீர் சர்ச்சை

பிஸ்லெரி குடிநீர் சர்ச்சை: குடிநீரில் உருவாகும் 'புரோமேட்' என்றால் என்ன? இதனால் புற்றுநோய் ஏற்படுமா? முழு விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

பிஸ்லெரி குடிநீர் மாதிரி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக புரோமேட் என்ற வேதிப்பொருள் இருந்ததாகக் கூறி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 30 அன்று கோவா ஆலையில் சேகரிக்கப்பட்ட 6 மாதிரிகளில் 5 மாதிரிகள் தரச்சான்று பெற்ற நிலையில் 6-வது மாதிரியில் 10 மைக்ரோகிராம் அளவிற்கு பதிலாக 12 மைக்ரோகிராம் புரோமேட் இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இருப்பினும் பிஸ்லெரியின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மறுபரிசோதனையில் புரோமேட் அளவு வரம்பிற்குள் இருப்பதாக நவம்பர் 23 அன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த குறிப்பிட்ட பேட்ச் தற்போது சந்தையில் இல்லை என்றும் பிஸ்லெரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

புரோமேட் வரம்பு

குடிநீரில் புரோமேட் எவ்வாறு உருவாகிறது மற்றும் உலக சுகாதார அமைப்பின் வரம்பு என்ன?

உலக சுகாதார அமைப்பின் விளக்கப்படி புரோமேட் என்பது இயற்கையாகத் தண்ணீரில் காணப்படும் பொருள் அல்ல.

குடிநீரைக் கிருமி நீக்கம் செய்வதற்காக ஓசோன் வாயுவை செலுத்தும் போது நீரில் புரோமைடு அயனிகள் இருந்தால் அவை வேதி வினைபுரிந்து புரோமேட் என்ற துணைப் பொருளாக மாறுகின்றன.

ஒருமுறை நீரில் புரோமேட் உருவாகிவிட்டால் அதை அகற்றுவது மிகவும் கடினம் என்பதால் சுத்திகரிப்பு நிலையிலேயே அதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

குடிநீரில் புரோமேட்டின் அளவு ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராமிற்குக் குறைவாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

புற்றுநோய் அபாயம்

மனித உடலில் புரோமேட் ஏற்படுத்தும் பாதிப்புகளும் புற்றுநோய் அபாயமும்

நியூயார்க் மாநில சுகாதாரத் துறையின் தகவல்படி குடிநீர் தர அளவை விடப் பல்லாயிரம் மடங்கு அதிக அளவு புரோமேட்டை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் அதிக செறிவு கொண்ட புரோமேட் சிறுநீரகப் பாதிப்பு நரம்பு மண்டலப் பாதிப்பு மற்றும் காது கேளாமை ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

ஆய்வக எலிகளுக்கு நீண்டகாலம் அதிக அளவு புரோமேட் கொடுத்ததில் புற்றுநோய் உருவாகியிருப்பதால் இது புற்றுநோய் உருவாக்கும் சாத்தியக்கூறு கொண்டதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் மனிதர்களுக்கு இது புற்றுநோயை ஏற்படுத்துமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT