உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது
இந்தியா: பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) ஒரு புதிய தடையை விதித்துள்ளது. உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும், பரிமாறுவதற்கும் மற்றும் சேமிப்பதற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு உணவு பாதுகாப்பு ஆணையம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருட்களுடன் செய்தித்தாள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கவலைகளைத் தீர்க்க, FSSAI ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளின்(பேக்கேஜிங்) விதிமுறைகள், 2018ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, உணவு பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கு மற்றும் சேமிப்பதற்கு இனி செய்தித்தாள்களைப் பயன்படுத்த கூடாது.
உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களை பயன்படுத்தினால் என்ன ஆகும்?
செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் மாசுபடுத்தும் உயிரியல் பொருள்கள் உள்ளன. அதனால், செய்தித்தாளில் படும் உணவை உண்பதால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், அச்சிடும் மைகளில் ஈயம் மற்றும் கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கும். அவை உணவில் கலந்தால், நீண்ட கால சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். அது போக, உணவுகளை பொட்டலம் கட்ட பயன்படுத்துவதற்கு முன், அந்த செய்தித்தாள்கள் அழுக்கிலும் தூசியிலும் கிடந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், செய்தித்தாள்களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகள் உணவுகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும்.