விலங்குகளிடம் இருந்து மனிதருக்கு பரவிய உயிரை பலி வாங்கும் 'ஷமோண்டா' வைரஸ்! நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு, இதுவரை விலங்குகளுக்கு மட்டுமே பரவி வந்த ஷமோண்டா என்ற வைரஸ் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. தீவிர நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளி அக்டோபர் தொடக்கத்தில் உயிரிழந்ததாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கிழக்குக் பகுதியில் கடந்த வசந்த காலம் மற்றும் கோடைக்காலத்தில் கால்நடைகளிடையே இந்த வைரஸ் பரவி வந்தது. அங்கிருந்த கியூலிகாய்டெஸ் என்ற சிறிய பூச்சி கடித்ததன் மூலமே இந்த நோயாளிக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழப்பதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட மூளைச் சிக்கல்களுக்கு இந்த ஷமோண்டா வைரஸ் தொற்றே முக்கியக் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
விவரங்கள்
ஷமோண்டா வைரஸ் என்றால் என்ன?
ஆர்த்தோபுன்யாவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஷமோண்டா வைரஸ், முதன்முதலில் 1960-களின் மத்தியில் நைஜீரியாவில் கண்டறியப்பட்டது.
இது பிரதானமாக பசுக்கள், ஆடுகள் மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளைப் பாதிக்கும் வைரஸாகும்.
கால்நடைகளுக்கு காய்ச்சல், சோர்வு, வயிற்றுப்போக்கு மற்றும் பால் உற்பத்தி பெருமளவில் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்த ஆண்டு கோடைக் காலத்தில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளிடையே இவ்வைரஸ் கண்டறியப்பட்டது.
ஆபத்து
பொதுமக்களுக்கு ஆபத்தா?
இதுவரை வரலாற்றிலேயே மனிதர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதாக பதிவானதில்லை.
தற்போது பிரான்ஸில் உயிரிழந்த நோயாளி கடுமையான நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டைக் கொண்டிருந்ததால் மட்டுமே இந்த அரிய வகைத் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என்றும், பொதுமக்களுக்கு இதன் மூலம் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும் சுகாதாரத் துறை உறுதியளித்துள்ளது.
இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மையம் (ECDC) ஆகியவற்றுடன் இணைந்து பிரெஞ்சு அதிகாரிகள் இது குறித்துத் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.