மெட்ராஸ் டே 2023: நடைப்பயணம் முதல் உணவு திருவிழா வரை, இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சில வழிகள்
சென்னை நகரம், தோன்றி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆண்டுதோறும் இந்த அழகிய நகரத்தின் ஆழமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. விஜயநகர அரசின் கீழ் இருந்த இந்த நகரம், கிழக்கிந்திய கம்பெனியின் முன்னெடுப்பால், துறைமுக நகரமாகவும், சென்னை பட்டினமாகவும் உருவானது. ஜார்ஜ் கோட்டையிலிருந்து தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், இந்த நகரை விரிவுபடுத்தவும் தவறவில்லை. இத்தகைய வரலாறு கொண்ட இந்த நகரில், 'மெட்ராஸ் டே' கொண்டாட பலரும் பல வழிகளை தேர்வு செய்கின்றனர். நடைபயணம் முதல் கண்காட்சி, உணவு திருவிழா, பைக் ரைட் என பல நிகழ்ச்சிகள், நகரம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ராஸ் தின கொண்டாட்டங்கள்
நடைப்பயணங்கள்: மெட்ராஸ் தினத்தை ஒட்டி, இந்த நகரத்தை சுற்றி பல தன்னார்வல நிறுவனங்கள், பாரம்பரிய நடைப்பயணங்கள் ஏற்பாடு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற சென்னையின் பாரம்பரியமான தெருக்களையும், வீடுகளையும் அதனை சுற்றி உள்ள வரலாற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். விரிவுரைகள்: சென்னையின் செழுமையான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பற்றி விளக்குவதற்காக, சென்னையின் பல்வேறு இடங்களில், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவர். உணவு திருவிழா: சென்னையில் காணப்படும் பல்வேறு வகையான உணவு வகைகளை காட்சிப்படுத்தும் வகையில் உணவுத்திருவிழா நடத்தப்படும். இந்தாண்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், வரும் ஆகஸ்ட் 27 அன்று உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது.