கொளுத்தும் கோடையில் வெறும் வயிற்றில் குடிக்க குளுகுளு பானங்கள்
கோடைக்காலம் வந்தாலே அதிக வெப்பம் சார்ந்த பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதில், நீர்ச்சத்து குறைபாடு, செரிமான பிரச்சனைகள் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்டவை அடங்கும். கோடை வெப்பத்தை தணிக்க பலரும் நாடுவது கோலாக்கள், சோடாக்கள், மற்றும் ஜில்லென்ற ஐஸ்கிரீம் தான். ஆனால் கோடை காலத்தில் இவற்றை முடிந்த வரையில் தவிர்த்து, ஆரோக்கியமான பானங்களை குடிப்பது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்காது. வெறும் வயிற்றில் ஜில்லென்ற இந்த பானங்களை குடித்தால் போதும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும், உடலுக்குத் தேவையான வைட்டமின், மினரல் சத்துக்கள் கிடைக்கும், செரிமானம் சீராகும் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
வெறும் வயிற்றில் என்னென்ன பானங்கள் குடிக்கலாம்
சியா விதைகள் சேர்த்த எலுமிச்சை ஜூஸ்: காலையில் எழுந்தவுடன், சியா விதைகள் சேர்த்த எலுமிச்சை ஜூஸ் குடிப்பது, உடலில் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தும், உடலை குளிர்விக்கும். வெள்ளரிக்காய் ஜூஸ்: இயற்கையாகவே உடலைக் குளிர்வித்து, வயிறு சார்ந்த கோளாறுகளை நீக்கும் வெள்ளரிக்காய் ஜூசை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. இளநீர்: கோடைகாலத்து அற்புத பானமாக விற்பனையாகும் இளநீரை தினசரி காலையில் குடித்து வரலாம். இது உடலுக்குத் தேவையான கனிமச்சத்துகளையும் வழங்கும். மோர்: நீர் மோரை காலையில் குடித்தால் நீர்ச்சத்து குறையாது என்பதோடு, செரிமானம் சார்ந்த பிரச்சனைகளும் தீரும். ஜூஸ் எல்லாம் செய்ய முடியாது என்பவர்களுக்கு, காலையில் எழுந்தவுடன் உங்களால் முடிந்த அளவுக்கு வயிறு நிறைய தண்ணீர் குடித்தால் கூட போதும்.