அதிர்ச்சித் தகவல்: தந்தையிடம் இருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் மகள்களுக்கு நீரிழிவு நோயை உண்டாக்கும்; ஆய்வில் வெளிவந்த உண்மை
செய்தி முன்னோட்டம்
தந்தையின் உடலில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள், அவரது குழந்தைகளுக்கு வளர்சிதை மாற்றக் கோளாறுகளை (Metabolic dysfunction) ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக மகள்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மைக்ரோபிளாஸ்டிக் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுள்ள மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்களாகும். இவை நாம் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் சிதைவடைவதால் உருவாகின்றன. 'Journal of the Endocrine Society' என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, தந்தை மைக்ரோபிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பிற்கு உள்ளாகும்போது, அது அவரது அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகள்கள்
மகள்களுக்கு ஏன் அதிக பாதிப்பு?
ஆய்வின் முடிவுகளின்படி, மைக்ரோபிளாஸ்டிக் பாதிப்புக்குள்ளான ஆண் எலிகளின் பெண் குட்டிகள் (மகள்கள்), அந்தப் பாதிப்பு இல்லாத தந்தை எலிகளின் குட்டிகளை விட அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக, பெண் குட்டிகளின் கல்லீரலில் வீக்கம் மற்றும் நீரிழிவு நோயைத் தூண்டும் மரபணுக்கள் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. பெண் குட்டிகளுக்குத் தசை நிறை (Muscle mass) குறைவதோடு நீரிழிவு நோய் அபாயம் அதிகரித்தது. அதேசமயம் ஆண் குட்டிகளுக்கு நீரிழிவு ஏற்படவில்லை என்றாலும், கொழுப்புச் சத்தில் லேசான மாற்றம் காணப்பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் தனிநபருடன் முடிந்துவிடுவதில்லை. அது அவரது குழந்தைகளுக்கு நாள்பட்ட நோய்களை உண்டாக்கும் உயிரியல் அடையாளத்தை (Biological imprint) விட்டுச் செல்கிறது.
தற்காப்பு
தற்காப்பு நடவடிக்கைகள்
இந்த ஆய்வை மேற்கொண்ட கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாங்செங் சோ கூறுகையில், "குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் ஆண்கள், தங்களது எதிர்காலக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மைக்ரோபிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் பாதிப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.