மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் சமூக ஊடகப் பயன்பாடு இல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை எனலாம். பள்ளி மாணவர்கள் கூட ஸ்மார்ட்போன்களைக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகப் பயன்பாடு அவர்களது மனநலனை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆய்வு ஒன்று சீனா, மலேஷியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒருவரது மனநலனை, அவர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரமே தீர்மானிப்பதாக இந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவானது, மேற்கூறிய மூன்று நாடுகளைச் சேர்ந்த 622 மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் மனநலனை பாதிக்கும் சமூக ஊடகப் பயன்பாடு:
சமூக ஊடகம் என்று மட்டுமில்லாமல், பொதுவாக அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் தாழ்வு மனப்பான்மை, அச்சம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பிரச்சினைகள் அதிகம் கண்டறியப்பட்டிருக்கின்றன. மேலும், ஒரு நாளில் சராசரியாக 4.8 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன் பயன்பாடு கொண்ட மாணவர்களிடம் மேற்கூறிய பிரச்சினைகள் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த விதமான பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். தனிமையைத் தவிர்க்க சமூக ஊடகங்களை நாடும் இவர்களால், நாளடைவில் நேரடி வாழ்விலும் சரியான ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது. சமூக ஊடகம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிகிறவர்களால் பிரச்சினை இல்லை. அப்படி கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாதவர்களுக்கு மனநல உதவி அளிப்பது சிறந்தது.