என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?
ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம். பணியாளர் வருங்கால வைப்புநிதித் திட்டம் (EPF): இந்த திட்டமானது சம்பளதாரர்களுக்கான கட்டாய வைப்புநிதி திட்டம். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகை கட்டாயமாக பிடித்தம் செய்யப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் வைப்புநிதி தொகையாக சேர்க்கப்படும். இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திருமணம், மருத்தும், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக கணிசமான அளவு பணத்தை திரும்பப்பெற முடியும். ஓய்வு காலத்தின் போதுதான் மொத்த பணத்தையும் திரும்பப்பெற முடியும்.
பொது வருங்கால வைப்புநிதித் திட்டம் (PPF):
இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சுயதொழில் செய்பவர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு பணத்தை பெற்றுக் கொள்ள இதில் முதலீடு செய்யலாம். ஆனால், இதில் முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகள் கழித்தே திரும்பப்பெற முடியும். இடையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக கணிசமான அளவு பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தன்னார்வ வருங்கால வைப்புநிதித் திட்டம் (VPF): EPF-ன் கூட்டுத்திட்டம் என்று கூட இதைக் கூறலாம். பணியாளர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகையானது ஓய்வு காலத்திற்குப் பிறகு தனக்குப் போதாது என்று கருதுபவர்களும், கூடுதலாக பிற வருவாயைப் பெறும் ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் EPF-உடன் கூடலாக இந்தத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்யலாம்.