வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்!
கோடை காலமென்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதிலும் தற்போது கத்திரி வெயில் வேறு ஆரம்பமாகிவிட்டது. கேட்கவா வேண்டும்! ஆனால், தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளும் வெளியே சென்று விளையாடுவதையே விரும்புவார்கள். இந்த கோடை காலத்தை சமாளிக்க, மருத்துவர்கள் சில அறிவுரைகளை கூறுகிறார்கள். காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். அப்படியே சென்றாலும் கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டாம், அது சூட்டை உள்ளிழுக்கும். மாறாக வெளிர் நிறம் அல்லது வெள்ளை நிற ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். எப்போதும் குடை எடுத்து செல்ல மறக்காதீர்கள். அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். 3 முதல் 5 லிட்டர் தண்ணீர், ஒரு நாளைக்கு அவசியம் குடிக்கவேண்டும்.
மண்பானை தண்ணீரே உடலுக்கு நல்லது
தண்ணீர் குடிப்பதால், உடம்பில் உள்ள நச்சுகள் வெளியேறுவது மட்டுமின்றி, தேவையான தாது சத்துகள், உங்களுக்கு கிடைக்கும். ஆனால், நீங்கள் பருகும் தண்ணீரிலும் கவனம் தேவை. சாதாரண தண்ணீர் குடிப்பது தான் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சூட்டை தணிக்க ஜில்லென்று ஐஸ் வாட்டர் அடிக்கடி குடிப்பதால், ரத்த குழாய்கள் சுருங்கும் அபாயம் உள்ளதென்றும், அதனால் ரத்த ஓட்டம் பாதிக்கும் என்றும் கூறுகிறார்கள். அது நாளடைவில், குடலின் செயல்பாட்டை பாதித்து, குடல் சுருங்கும் அபாயம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்றால், மண் பானையில் ஊற்றி வைத்து குடிக்கலாம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீர் சத்து நிறைந்த பழங்களும், காய்கறிகளையும் அதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டும்