புற்றுநோய் நோயாளிகளுக்கு நிம்மதி! 137 முக்கிய மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் நோக்கில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மூலம் 137 பட்டியலிடப்படாத புற்றுநோய் மருந்துகளின் மீது வர்த்தக லாப வரம்பு சீரமைப்பை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் இம்மருந்துகளின் அதிகபட்ச விற்பனை விலை 70% வரை குறையவுள்ளது. புதிய விலைக் குறைப்பு வரும் நவம்பர் 9, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
லாப வரம்பு
லாப வரம்பைக் கட்டுப்படுத்த புதிய ஃபார்முலா
2013 ஆம் ஆண்டின் மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) உத்தரவின் (DPCO) 19-வது பிரிவின் கீழ், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான வர்த்தக லாப வரம்பை அதிகபட்சமாக 30% ஆக ஆணையம் நிர்ணயித்துள்ளது.
உதாரணமாக, உற்பத்தி விலை ரூ. 70 ஆக உள்ள ஒரு புற்றுநோய் மருந்து, வர்த்தகர்களின் அதிகப்படியான லாப வரம்பால் இதுவரை ரூ. 300 வரை விற்கப்பட்டு வந்தது.
புதிய விதிகளின்படி, அதே மருந்து ரூ. 100 + ஜிஎஸ்டி (GST) என்ற கணக்கீட்டில் மட்டுமே விற்கப்பட வேண்டும். இதன் மூலம் நோயாளிகளின் நிதி சுமை கணிசமாகக் குறையும்.
முக்கிய நோய்களுக்கான மருந்துகள்
விலைக் குறைப்பு அடங்கும் முக்கிய நோய்களுக்கான மருந்துகள்
மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட், பெருங்குடல், கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உட்பட 20-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்கான இம்யூனோதெரபி மருந்துகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாகப் பெம்ப்ரோலிஸுமாப் (Pembrolizumab), துர்வாலுமாப் (Durvalumab), ஒசிமெர்டினிப் (Osimertinib), பெவசிஸுமாப் (Bevacizumab) மற்றும் டெனோசுமாப் (Denosumab) போன்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் பெருமளவில் குறைகின்றன.
2019-இல் 42 மருந்துகளின் விலையை குறைத்ததன் தொடர்ச்சியாக இப்புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாடுகள்
நவம்பர் 9 முதல் அனைத்து சில்லறை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளை மருந்தகங்கள் அனைத்தும் திருத்தப்பட்ட புதிய குறைந்த விலையிலேயே மருந்துகளை விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தங்கள் மருந்தக முகப்பிலும் இணையதளங்களிலும் புதிய விலைப்பட்டியலைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தங்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள புதிய மருந்து விலைகளை ஃபார்மா சஹி தாம் மொபைல் செயலி அல்லது ஆணையத்தின் இணையதளம் மூலம் நேரடியாக சரிபார்த்துக் கொள்ளலாம்.