மருத்துவ உலகில் சாதனை! பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை! புதிய மரபணு - கண்ணாடி சிகிச்சை வெற்றி
செய்தி முன்னோட்டம்
கண் பார்வையை முழுமையாக இழந்து அவதிப்படும் நோயாளிகளுக்கு மீண்டும் பகுதிப் பார்வையை மீட்டுத் தரும் புரட்சிகரமான புதிய மருத்துவ சிகிச்சையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 10 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பிரத்யேகக் கண்ணாடி மற்றும் மரபணு ஊசி சிகிச்சையின் மூலம் சில நோயாளிகளுக்கு பார்வைத் திறன் மீண்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பிரபல தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
நோய் பாதிப்பு
ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா நோய் மற்றும் சிகிச்சை முறைகள்
ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்பது விழித்திரையில் உள்ள ஒளியை உணரும் செல்களைப் படிப்படியாகப் பாதிக்கும் ஒரு பரம்பரை நோயாகும்.
100-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களால் இந்நோய் ஏற்படுவதால், இதற்குத் தனித்தனியாக சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்தது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள ஆப்டோஜெனடிக் சிகிச்சை முறையில், பார்வையை இழந்து தவிக்கும் விழித்திரையில் உள்ள நரம்பு செல்களுக்குப் புதிய ChrimsonR என்ற ஒளியை உணரும் புரதத்தை உருவாக்கக் கூடிய மரபணு ஊசி செலுத்தப்படுகிறது.
இது விழித்திரையை மீண்டும் ஒளிக்கு செயல்படும் வகையில் மாற்றுகிறது.
கண்ணாடி
பிரத்யேக கண்ணாடியின் தொழில்நுட்ப செயல்பாடு
மரபணு ஊசி செலுத்திய பிறகு நோயாளிகளுக்குப் பிரத்யேகக் கண்ணாடி வழங்கப்படுகிறது.
இக்கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் வெளிச்ச மாறுபாடுகளைக் கண்டறிந்து, அதை ஆம்பர் நிற ஒளி அலைகளாக மாற்றி விழித்திரையின் மீது செலுத்துகிறது.
இந்த ஒளி அலைகள் விழித்திரையில் உருவாக்கப்பட்ட புரதத்தைத் தூண்டி, காட்சிச் சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புகின்றன.
இக்கண்ணாடி வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்பத் தன்னையே மாற்றியமைத்துத் துல்லியமான பார்வையை வழங்குகிறது.
சோதனையில் பங்கேற்றவர்களுக்குக் குறைந்தபட்சம் 2 முதல் 62 மடங்கு வரை ஒளி உணர்திறன் அதிகரித்துள்ளது.
ஆராய்ச்சி
ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்
சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில், நோயாளிகளால் மேஜை மீதுள்ள குறிப்பேடு மற்றும் சிறிய பெட்டிகளைக் கண்டறிந்து தொட்டு உணர முடிந்தது.
ஐந்து நோயாளிகளின் மூளைப் பதிவுகளை பரிசோதித்தபோது, காட்சி சமிக்ஞைகள் மூளையை சென்றடைந்தது உறுதிசெய்யப்பட்டது.
2 முதல் 5 ஆண்டுகள் வரை நடத்தப்பட்ட பின்விளைவு ஆய்வுகளில் இச்சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது என நிருபணமாகியுள்ளது.
ஜென்சைட் பயோலாஜிக்ஸ் நிறுவனம் நிதியளித்த இந்த ஆய்வின் அடுத்தகட்ட விரிவான ஆராய்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.