சுட்டெரிக்கும் கோடை வெயில்: உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் 'டாப்' உணவுகள்!
செய்தி முன்னோட்டம்
கோடைகாலம் ஆரம்பமானதிலிருந்து தமிழகத்தில் வெயிலின் மிகவும் அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் கத்திரி வெயிலும், அனல் காற்றும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் வரை நீடிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கடுமையான வெயில் நீடிக்கும் இக்காலத்தில், செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து இயற்கையான இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கோடையைச் சமாளித்து ஆரோக்கியமாக வாழலாம். இத்தகைய கடுமையான கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) மற்றும் சோர்வைத் தடுக்க, நாம் உட்கொள்ளும் உணவு முறையில் சில மாற்றங்களைச் செய்வது அவசியமாகிறது. வெயிலுக்கு இதமான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் இதோ.
#1
நீர்ச்சத்தின் ஊற்று: முலாம் பழம்
கோடை காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முதலிடம் வகிக்கிறது. இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலில் ஏற்படும் நீரிழப்பை உடனடியாகக் குறைக்கிறது. அதிக சுவையுடன் இருப்பதால் கோடை கால தாகத்தைத் தணிக்க இது ஒரு சிறந்த தேர்வாகும்.
#2
சருமப் பாதுகாப்பு: பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, ப்ளாக் பெர்ரி என பெர்ரி வகை பழங்களில் ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரிகளில் உள்ள அதிகப்படியான 'பிளாவனாய்டுகள்' சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இவை தோலின் ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்துகின்றன. ப்ளாக் பெர்ரி மற்றும் ராஸ் பெர்ரிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கும் உதவுகிறது.
#3
பொட்டாசியம் நிறைந்த சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் உடலுக்குப் புத்துயிர் அளிக்கின்றன. வெயில் காலத்தில் வியர்வை மூலம் உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால், தசைப்பிடிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் இழந்த சத்துக்களை ஈடு செய்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்ப்பது அல்லது உணவில் எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிடுவது உடலுக்குத் தேவையான வைட்டமின்-சி சத்தை வழங்குகிறது.
#4
கண்களுக்கு கவசம்: இனிப்பு சோளம்
கோடை காலத்தின் மிகச்சிறந்த காய்கறிகளில் ஒன்றான இனிப்பு சோளம் (Sweet Corn), கண்களுக்குச் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. இது கண்புரை மற்றும் கண் தசை சிதைவைத் தடுக்கிறது. குறிப்பாக, கோடையின் அனல் காற்று மற்றும் வெப்ப அலை பாதிப்பிலிருந்து கண்களைப் பாதுகாப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
#5
ஆற்றல் தரும் அவகேடோ
அவகேடோ பழம் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பப்பெற்ற ஒரு முழுமையான உணவாகும். இது இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு (Anti-allergy) சக்தியைக் கொண்டிருப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைக்க உதவுகிறது.