நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?
அதிக ஆபத்தில்லமால் முதலீடு செய்பவர்களுக்கான முக்கியமான முதலீட்டுக் கருவியாக விளங்கி வருகின்றன நிலையான வைப்பு நிதித் (Fixed Deposit) திட்டங்கள். நிலையான வைப்புநிதித் திட்டங்களின் கீழ் வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு குறிப்பிட்ட லாக்-இன் காலம் இருக்கும். மேலும், முதிர்வடையும் காலத்திற்கு முன்பு நிலையான வைப்பு நிதித் திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத்தை திரும்பப்பெற்றால், அதனால் கிடைக்கும் லாபம் குறையும். முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் தேவைப்படுவபவர்கள், நிலையான வைப்பு நிதித் திட்டங்களுக்கு எதிராகக் கொடுக்கப்படும் கடனைப் பெற முயற்சி செய்யலாம். சாதாரணமாகக் கொடுக்கப்படும் கடனை விட நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் பணத்திற்கு எதிராகப் பெறப்படும் கடனிற்கான வட்டி சற்று குறைவாக இருக்கும்.
நிலையான வைப்புநிதிக்கு எதிரான கடன்:
ஒரு வங்கியானது நமக்குக் கடன் கொடுக்கும் முன்னர், அந்தக் கடனிற்கான பாதுகாப்பாக நமது வைப்புநிதி இருப்பதனால் சாதாரணமாகக் கடன் பெறுவதை விட, நிலையான வைப்பு நிதிக்கு எதிராகக் கடன் பெறுவது மிகவும் எளிது. நமது வைப்பு நிதித் தொகையில் இருந்து 70-95% வரை நம்மால் கடனாகப் பெற முடியும். ஆனால், நம்முடைய மொத்த வைப்பு நிதித் தொகையின் அளவையும் கடனாக நம்மால் பெற முடியாது. வைப்பு நிதியின் மூலம் வங்கிகள் பெறும் கடன் அளவை விட 50-200 அடிப்படைப் புள்ளிகள் வரை கூடுதலாக வைத்து, அதற்கு எதிரான கடனிற்கான வட்டியாக நாம் செலுத்த வேண்டியிருக்கும். பாதுகாப்பான கடன் என்பதால், ப்ராசஸிங் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் கட்டணம் எதுவும் நம்மிடம் வசூலிக்கப்படமாட்டாது.