புற்றுநோய் மருத்துவத்தில் புதிய புரட்சி; நோயாளிகளின் வாழ்நாளை இரட்டிப்பாக்கிய ஆஸ்ட்ராஜெனகாவின் Sone-ve மருந்து
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனின் முன்னணி மருந்தாக்க நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகா, முற்றிய நிலையிலான வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்நாளை இரட்டிப்பாக்கும் சோனிசிடாடக் வெடோடின் (Sone-ve) என்ற சோதனை கட்ட மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. மாட்ரிட் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய மருத்துவ புற்றுநோயியல் சங்கத்தின் மாநாட்டில் அக்டோபர் 25 அன்று இந்த புதிய தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கமான கீமோதெரபி சிகிச்சையை பெற்ற நோயாளிகள் சராசரியாக 5 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்த நிலையில், இப்புதிய மருந்தை உட்கொண்டவர்கள் சராசரியாக 10 மாதங்கள் வரை உயிர் வாழ்ந்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனை
532 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட கட்டம் 3 மருத்துவப் பரிசோதனை
க்ளாரிட்டி-கேஸ்ட்ரிக் 01 (CLARITY-Gastric01) என்ற பெயரில் 532 நோயாளிகளிடம் இந்த கட்டம் 3 மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே இரண்டு கட்ட சிகிச்சைகளைப் பெற்றுப் பலனளிக்காத முற்றிய வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உணவுக் குழாய் புற்றுநோயாளிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த புதிய மருந்து நோயாளிகளின் இறப்பு ஆபத்தை 53 சதவீதம் வரை கணிசமாகக் குறைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ உலகில் இது மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஏடிசி தொழிலநுட்பம்
புற்றுநோய் செல்களை மட்டும் இலக்கு வைக்கும் ஏடிசி தொழில்நுட்பம்
சோனிசிடாடக் வெடோடின் என்பது ஆன்டிபாடி ட்ரக் கான்ஜுகேட் (ஏடிசி) வகையை சேர்ந்த ஒரு நவீன புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகும்.
வழிகாட்டும் ஏவுகணை போல் செயல்படும் இத்தொழில்நுட்பம், உடலின் ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல் புற்றுநோய் செல்களில் உள்ள CLDN18.2 என்ற புரதத்தை மட்டும் துல்லியமாகக் கண்டறிந்து கீமோதெரபி மருந்தைப் பாய்ச்சுகிறது.
தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள பிற மருந்துகளுக்கு புற்றுநோய் செல்களில் 75% புரத இலக்கு தேவைப்படும் நிலையில், இப் புதிய மருந்து 25% இலக்கு இருந்தாலே சிறப்பான பலனை அளிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்கால வாய்ப்புகள்
குறைவான பக்கவிளைவுகள் மற்றும் எதிர்கால வணிக வாய்ப்புகள்
வழக்கமான கீமோதெரபி சிகிச்சையில் 44.8 சதவீத நோயாளிகளுக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்ட நிலையில், இப்புதிய மருந்தினால் 36.4 சதவீதத்தினருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த மாத்திரைக்கு 'அனாதை மருந்து' (Orphan Drug) அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
உலக அளவில் ஆண்டுதோறும் 1.83 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்படுவதால், இப்புதிய மருந்து சந்தைக்கு வரும் போது சுமார் $3 பில்லியன் முதல் $5 பில்லியன் டாலர் வரை விற்பனையை எட்டும் என ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் கணித்துள்ளது.